கார்த்தி நடித்துள்ள ‘தேவ்’ படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை, சன் டிவி கைப்பற்றியுள்ளது.
கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தேவ்’. அறிமுக இயக்குநரான ரஜத் ரவிசங்கர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மண் குமார் இந்தப் படத்தைத் தயாரிக்க, ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் வெளியிடுகிறது.
கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடித்துள்ளார். ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இருவரும் இணைந்து நடித்துள்ளனர். கார்த்தியின் அப்பாவாக பிரகாஷ் ராஜும், ரகுல் ப்ரீத்சிங்கின் அம்மாவாக ரம்யா கிருஷ்ணனும் நடித்துள்ளனர்.
கார்த்திக், சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். வம்சி கிருஷ்ணா, ரேணுகா, ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆக்ஷன் அட்வெஞ்சர் த்ரில்லர் படமாக இது உருவாகியுள்ளது.
காதலர் தினத்தை முன்னிட்டு, பிப்ரவரி 14-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில், படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் உரிமைகளை சன் டிவி கைப்பற்றியுள்ளது.