‘சைரா நரசிம்ம ரெட்டி’ தெலுங்குப் படத்தில் போர்வீரனாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி.
சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘சைரா நரசிம்ம ரெட்டி’. ராயலசீமாவில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது.
நரசிம்ம ரெட்டி வேடத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். அவருடைய 151-வது படமான இதை, ராம் சரண் தயாரிக்கிறார். சிரஞ்சீவி ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விஜய் சேதுபதி, தமன்னா, 'நான் ஈ' சுதீப், ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
கெஸ்ட் ரோலில் அமிதாப் பச்சன் நடித்துள்ளார். சிரஞ்சீவி - நயன்தாரா திருமணக் காட்சியில்தான் அமிதாப் பச்சன் கெஸ்ட் ரோலில் நடித்தார்.
ரத்னவேலு ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படம், தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தியில் உருவாகி வருகிறது. ‘பாகுபலி’க்குப் பிறகு அதிக பட்ஜெட்டில் உருவாகும் தெலுங்குப் படம் இதுதான் என்கிறார்கள். 240 கோடி ரூபாயில் இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விஜய் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருடைய கதாபாத்திரத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. போர்வீரன் ராஜபாண்டி என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். அதுவும் தமிழனாக நடிக்கிறார் எனத் தகவல் கிடைத்துள்ளது.