சமீபகாலமாக சன் லைஃப் தொலைக்காட்சியில் பல புதிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. இதில், ‘மசாலா கஃபே’ நிகழ்ச்சி வழியாக, அளவற்ற காமெடி கலாட்டாக்களை வழங்கி வருகின்றனர் விக்கி என்கிற விக்னேஷ்காந்த் - ‘சுட்டி’ அரவிந்த் கூட்டணி.
“பன்னிரெண்டு வருஷங்கள் ஆச்சு. ‘அட நம்ம பசங்க வந்துட்டாங்கப்பா’ன்னு சின்னத்திரையில நாங்க கொடுக்குற காமெடிக்குன்னு ஒரு வட்டம் எப்பவும் இருந்துகிட்டே இருப்பதுதான் பெரிய சம்பாத்தியம்.
சின்னத்திரைக்குள்ளே இப்போ வர்ற காமெடி நடிகர்களும், பத்து, பன்னெண்டு வருஷங்களுக்கு முன்ன வந்த சீனியர்ஸும் சேர்ந்து கொண்டாடுற நிகழ்ச்சியா இந்த ‘மசாலா கஃபே’ இருக்கு. எல்லோரையும் செட்ல பார்க்கும்போது அப்படி ஒரு ஆனந்தமா இருக்கும்.
சின்னத்திரை, சினிமான்னு ஓடிக்கிட்டிருந்த எங்களை ‘ப்ளாக் ஷிப்’ யூ-டியூப் சேனல் இன்னும் பிஸியாக்கிடுச்சு. இப்போதெல்லாம் டிவியையே பலரும் யூ-டியூப்லதான் பார்க்குறாங்க. சன் லைஃப்ல ஒரு நிகழ்ச்சியை பார்க்க தவறிட்டா சன் நெக்ஸ்ட்ல பார்த்துக்கலாம்னு ஓடி வந்துடுறாங்க. அந்த அளவுக்கு அறிவியல், தொழில்நுட்பம் வளர்ந்திருக்கு. நான், விக்கி, பிரபான்னு 4 பேர் சேர்ந்து விளையாட்டுத்தனமா ஆரம்பிச்சதுதான் ‘ப்ளாக் ஷிப்’ யூ-டியூப் சேனல். புதிய ஐடியா, புதிய வீடியோன்னு நம்ம பசங்க ஆர்வம் காட்டி வளர்த்த சேனல் இது. இப்போ ஏகப்பட்ட எடிட்டர்ஸ், கேமராமேன், கிரியேட்டிவ் டீம் என 43 பேர் இருக்கோம். கிட்டத்தட்ட 20 லட்சம் ஃபாலோயர்ஸ். அதோட, எங்க டீம்ல இருந்தும் ஒவ்வொருத்தரா திரைப்பட இயக்குநரா வர ஆரம்பிச்சாச்சு. இதைவிட என்ன சந்தோஷம் வேணும்?” என்கிறார் ‘சுட்டி’ அரவிந்த். இவர் ‘நட்பே துணை’, ‘தேவ்’, சிவகார்த்திகேயன் தயாரிப்பில், ப்ளாக் ஷிப் டீம் இயக்கும் புதிய படம் ஆகியவற்றிலும் நடித்து வருகிறார்.