தெலுங்கில் நிலவி வரும் 'பேட்ட' சர்ச்சைத் தொடர்பாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஸ்ரீரெட்டி ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி, விஜய் சேதுபதி, சசிகுமார், த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்தகி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பேட்ட'. ஜனவரி 10-ம் தேதி தமிழகத்தில் வெளியாகியுள்ள அதே வேளையில், தெலுங்கிலும் வெளியாகியுள்ளது.
தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் 'என்.டி.ஆர்' மற்றும் ராம்சரண் நடிக்கும் 'வினய விதேய ராமா' ஆகிய படங்கள் அதிகமான திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனால், 'பேட்ட' படத்துக்கு குறைவான திரையரங்குகளுக்கு கிடைத்துள்ளது.
இது தொடர்பாக 'பேட்ட' படத்தின் தெலுங்கு வெளியீட்டு உரிமையை அசோக் வல்லபனேனி கடுமையாக சாடினார். அல்லு அரவிந்த், தில் ராஜு மற்றும் யூவி க்ரியேஷன்ஸ் உள்ளிட்ட பலரையும் கடுமையாக சாடி சர்ச்சையை உண்டாக்கினர்.
இந்த விவகாரம் தொடர்பாக, தெலுங்கு திரையுலகில் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஸ்ரீரெட்டியும் ஃபேஸ்புக்கில் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
ரஜினிகாந்த் என்ற மிகப்பெரிய ஆளுமை நடித்த பேட்ட படத்திற்கு தெலுங்கு மாநிலங்களில் குறைந்த தியேட்டர்கள்தானா? டோலிவுட் சினிமா மாஃபியாக்களுக்கு வெட்கக்கேடு.. தூ.. சுரேஷ் பாபு, அல்லு அரவிந்த், சுனில் நரங் மற்றும் தில் ராஜு.. இவர்கள் சிறிய தயாரிப்பாளர்களை கொல்கிறார்கள்,
தற்கொலைக்கான சூழல்களை உருவாக்குகிறார்கள்.. சீக்கிரம் அவர்களே தொங்கும் நிலை வரும்.. கடவுள் இருக்கிறார். உங்கள் மகன்களும் குடும்பத்தினரும் இப்போது சந்தோஷமாக இருக்கலாம்.. டோலிவுட்டுகே இது வெட்கக்கேடு.. இவர்களின் தெலுங்கு டப்பிங் படங்களை தமிழகத்தில் தடை செய்யுங்கள்..
இந்த மாஃபியா தலைவர்களைக் கொல்லுங்கள்.. டோலிவுட்டுக்கு வெட்கக்கேடு.. பேட்ட படத்தின் விநியோகஸ்தர் அசோக் அவர்களே.. இந்த சூழ்நிலைக்கு வருந்துகிறேன்...
இவ்வாறு ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.