’பேட்ட’ ரஜினி சாருடைய படம் என்று அப்படத்தில் வில்லனாக நடித்துள்ள விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி, விஜய் சேதுபதி, சசிகுமார், த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்தகி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பேட்ட'. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.
ஜனவரி 10-ம் தேதி வெளியீட்டுக்கு திரையரங்குகள் ஒப்பந்தம் செய்வது, விளம்பரப்படுத்துவது என படக்குழு தீவிரமாக பணிபுரிந்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் படக்குழுவினருடைய சிறு பேட்டியை வெளியிட்டு வருகிறது.
இதில் 'பேட்ட' படத்தில் வில்லனாக நடித்திருக்கும் விஜய்சேதுபதி பேட்டியின் கேள்வியும் பதிலும்:
'பேட்ட' படப்பிடிப்பின் போது நடந்த முக்கியமான தருணங்கள்?
நானும் ரஜினி சாரும் கேரவனில் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அது என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்.
மறுபடியும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இந்த கேள்வியே என்னிடம் கேட்கக்கூடாது என்று நினைக்கிறேன். நானும் கார்த்திக் சுப்புராஜும் சேர்ந்து பணிபுரிவது என்பது முடி வெட்டுவது போன்றது. கார்த்திக் எப்போதும் என் மீது பெரிய நம்பிக்கை வைத்திருப்பார். எங்களுக்குள் எத்தனை முறை கருத்து வேறுபாடு வந்தாலும் அதையெல்லாம் தாண்டி எங்களுக்கு இடையில் அன்பு இருந்து கொண்டே இருக்கும். அவருக்கு மிகப்பெரிய நன்றியை கூறிக் கொள்கிறேன்.
’பேட்ட’ படத்தை ஒரு வார்த்தையில் விவரிக்க முடியுமா?
ரஜினி சார் படம்