தமிழ் சினிமா

சிம்பு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

செய்திப்பிரிவு

சிம்பு நடித்துள்ள ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. சிம்பு ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், கேத்ரின் தெரேசா மற்றும் மேகா ஆகாஷ் என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். பிரபு, ரம்யா கிருஷ்ணன், நாசர், சுமன், மஹத், ரோபோ சங்கர், யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘அத்தரண்டிகி தாரேதி’ படத்தின் ரீமேக் இது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் முதலில் ‘பொங்கல் வெளியீடு’ என அறிவிக்கப்பட்டது. ஆனால், அஜித்தின் ‘விஸ்வாசம்’ மற்றும் ரஜினியின் ‘பேட்ட’ படங்கள் ரிலீஸானதால், இந்தப் படத்துக்குப் போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை. எனவே, திட்டமிட்டபடி படம் ரிலீஸாகவில்லை.

இதனால், படம் எப்போது ரிலீஸாகும் என சிம்பு ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். இந்நிலையில், பிப்ரவரி முதல் தேதி படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது லைகா புரொடக்‌ஷன்ஸ். இந்த அறிவிப்பால் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

ராம் இயக்கத்தில் மம்மூட்டி நடித்துள்ள ‘பேரன்பு’, ராஜிவ் மேனன் இயக்கத்தில் ஜீ.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘சர்வம் தாளமயம்’ ஆகிய படங்களும் பிப்ரவரி முதல் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT