நிறையப் பேர் சொல்ல மறந்து போன கதை, சொல்லாமல் விட்ட கதை 'பேரன்பு' என்று மம்மூட்டி தெரிவித்தார்
ராம் இயக்கத்தில் மம்மூட்டி, அஞ்சலி, சாதனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பேரன்பு'. யுவன் இசையமைத்துள்ள இப்படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பிப்ரவரி 1-ம் தேதி வெளியாகவுள்ள 'பேரன்பு' திரைப்படம், பிரத்யேகமாக பத்திரிகையாளர்களுக்குத் திரையிடப்பட்டது.
படத்தின் திரையிடல் முடிந்தவுடன் படக்குழுவினர் அனைவருமே மேடையில் தோன்றினார்கள். இதில் கலந்து கொண்ட மம்மூட்டி பேசியதாவது:
''இப்படத்தைப் பற்றி நான் பேசுவதை விட, 'பேரன்பு' படம் தான் பேசும். ரொம்ப வித்தியாசமான ஒரு கதை. ரொம்ப கவனமாக பண்ண படம். நிறைய திரைப்பட விழாக்களில் பார்த்துவிட்டுப் பாராட்டினார்கள்.
10 வருடங்களுக்குப் பிறகு தமிழில் நடிக்கிறேன். ஏன் தமிழில் நடிக்கவில்லை என்றால், என்னிடம் பதில் இல்லை. இப்படத்தில் நடிக்க பெரிதாக கஷ்டப்படவில்லை. எனக்கு அப்படியொரு குழந்தை இருந்தால் எப்படியிருக்கும் என நினைத்தேன், நடித்தேன். ரொம்ப எளிதாக இருந்தது.
நீங்கள் எல்லாம் ரொம்ப ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை இந்தப் படம் பார்த்தால் தான் தெரியும். நிறைய மாற்றுத்திறனாளி குழந்தைகளைப் பார்த்திருப்போம். அவர்களுக்கு எந்தவொரு பிரச்சினையுமே இருக்காது. அவர்களை வளர்ப்பவர்களுக்குத் தான் பிரச்சினை.
யாருமே சொல்லாத கதையல்ல. நிறையப் பேர் சொல்ல மறந்து போன கதை. சொல்லாமல் விட்ட கதை. படக்குழுவினர் அனைவருமே ரொம்ப அன்போடு இப்படத்தை எடுத்திருக்கிறோம்''.
இவ்வாறு மம்மூட்டி பேசினார்.