மணிரத்னம் தயாரிக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஜீ.வி.பிரகாஷ்
2018-ம் ஆண்டு பாரதிராஜா, விஜய யேசுதாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'படைவீரன்'. தனசேகரன் இயக்கிய இப்படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது.
தனசேகரன் இயக்கவுள்ள அடுத்த படத்தை மணிரத்னத்தின் 'மெட்ராஸ் டாக்கீஸ்' நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கு '96' படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைக்கவுள்ளார்.
பெயரிடப்படாத இப்படத்தின் நாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார் ஜீ.வி.பிரகாஷ். முதலில் இப்படத்தை தானே இயக்கலாம் என்றே முடிவு செய்திருக்கிறார். ஆனால், 'பொன்னியின் செல்வன்' வேலைகளால் தன்னிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த தனசேகரனுக்கு இந்த வாய்ப்பை வழங்கியுள்ளார் மணிரத்னம். படத்துக்கு வசனம் மணிரத்னம் தான்.
இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. ஜீ.வி.பிரகாஷுடன் நடிக்கவிருப்பவர்கள் தேர்வில் தற்போது தீவிரம் காட்டி வருகிறது படக்குழு. இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகவுள்ளது.
'சர்வம் தாளமயம்', 'ஐங்கரன்', '100% காதல்', 'குப்பத்து ராஜா', 'ஜெயில்' என ஜீ.வி.பிரகாஷ் நடித்து பல படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளன. இதில், பிப்ரவரி 1-ம் தேதி 'சர்வம் தாளமயம்' திரைப்படம் திரைக்கு வரவுள்ளது.