'கனா' லாபத்தில் ஒரு பங்கை வைத்து விவசாயிகளுக்கு உதவி செய்வோம் என்று வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக அறிமுகமான படம் 'கனா'. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
டிசம்பர் 21-ம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் பொருட்செலவுக்கு வந்த வசூல் மிகப்பெரியது என்பதால், வெற்றி விழா கொண்டாடியது 'கனா' படக்குழு.
இவ்விழாவில் சிவகார்த்திகேயன் பேசியதாவது:
நடிகர் தான் என் அடையாளம், அது தான் நிரந்தரம். தயாரிப்பாளர் என்பதெல்லாம் அதில் இருந்து கிடைத்தது தான். நிறைய படங்களுடன் ரிலீஸ் ஆனாலும், அதில் ஹீரோ இல்லாத ஒரு படம் தான் இது. ஆனாலும் வெற்றியை எட்ட காரணம் அதை ரிலீஸ் செய்து கொடுத்த ஆருத்ரா ஃபிலிம்ஸ்க்கு நன்றி.
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' எனக்கு திருப்புமுனை தந்த படம், இது நான் தயாரித்த முதல் படம். என் சினிமா கேரியரின் இந்த இரண்டு முக்கியமான தருணங்களில் உடன் இருந்திருக்கிறார் சத்யராஜ் சார்.
திபு நினன் தாமஸ் இசை படத்துக்கு பெரிய பலம், வைக்கம் விஜயலக்ஷ்மி அவர்களின் குரலும் ஆசிர்வாதமும் நல்ல துவக்கத்தை தந்தது. ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு தேசிய விருது கிடைக்கும் என்று ஒரு கமெண்ட் பார்த்தேன். அது இந்த படத்தில் நடந்தாலும் மகிழ்ச்சி, வேறு படத்தில் நடந்தாலும் மகிழ்ச்சி. அந்த விருதுக்கு தகுதியானவர்.
20 மேட்ச்க்கான காட்சிகளை படம் பிடித்து கொடுத்தாலும் அதை சிறப்பாக கட் செய்த ரூபனுக்கு நன்றி. தினேஷ் கிருஷ்ணன் மிக அழகாக ஒளிப்பதிவு செய்பவர். என்னை பாலசுப்ரமணியம் சாருக்கு பிறகு அழகாக காட்ட நிறைய முயற்சிகள் எடுப்பார்.
எனக்கு எந்த அழுத்தமும் கொடுக்காமல் எல்லா சுமையையும் தன் தோளில் தாங்கிய கலையரசுக்கு நன்றி. அற்புதமான நண்பர்கள் சேர்ந்தால் வெற்றிகள் குவியுமடா என்ற வரி எனக்கு மிகவும் பிடிக்கும். அதை நான் நம்புகிறேன், உணர்கிறேன். இந்த படம் எங்கள் பேனருக்கு லாபகரமான படம்.
இப்படத்தின் லாபம் என் நண்பர்களுக்கு சேரும். அதில் ஒரு பங்கு இப்படத்தின் இறுதிக்காட்சியில் யாருடைய வலியைச் சொல்லியதோ, அதில் ஒரு சிலருடைய வலியை போக்கவும் பயன்படும். நான் யாருக்கு என்ன செய்யப் போகிறேன் என்பதை சொல்லவே மாட்டேன். நமக்கு சோறு போடுற 4, 5 விவசாயிகளின் வாழ்க்கையாவது இந்த லாபத்தில் வந்த பணம் மாற்றும் என்பதை உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன். இதைச் சொல்ல வேண்டாம் என நினைத்தேன். ஆனால், படத்தில் அவ்வளவு பேசிவிட்டு, பதிவு பண்ணாமல் சென்றால் நன்றாக இருக்காது என்பதால் சொல்லிவிட்டேன்.
இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசினார்.