தமிழ் சினிமா

‘துப்பாக்கி 2’ எடுப்பது உறுதி: ஏ.ஆர்.முருகதாஸ்

செய்திப்பிரிவு

‘துப்பாக்கி’ படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது உறுதி என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான படம் ‘துப்பாக்கி’. விஜய் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்தார். வித்யுத் ஜம்வால், ஜெயராம், சத்யன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த இந்தப் படத்தை, வி கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.தாணு தயாரித்தார். ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் இந்தப் படத்தை வெளியிட்டது. ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இது, 2012-ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி வெளியாகி, மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்தப் படம்தான் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த முதல் படம். இதைத் தொடர்ந்து ‘கத்தி’ படத்தில் இருவரும் இணைந்தனர். விஜய் இரண்டு வேடங்களில் நடித்த இந்தப் படமும் ஹிட்டானதால், மூன்றாவது முறையாக ‘சர்கார்’ படத்தில் இணைந்தனர். கடந்த வருடம் (2018) தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸானது.

இந்நிலையில், தனியார் இணையதள விழா ஒன்றில் பேசிய ஏ.ஆர்.முருகதாஸ், ‘துப்பாக்கி 2’ படம் கண்டிப்பாக வரும் என்று தெரிவித்தார். எனவே, நான்காவது முறையாகவும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இணையும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது ரஜினியை வைத்து இயக்கப்போகும் படத்துக்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

SCROLL FOR NEXT