சூர்யா நடிக்க உள்ள புதுப்படத்தின் படப்பிடிப்பு, வருகிற மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது.
சூர்யா நடிப்பில் ரிலீஸுக்குத் தயாராகிவரும் படம் ‘என்.ஜி.கே.’. செல்வராகவன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
சூர்யா ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.
தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘காப்பான்’ படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. லண்டனில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
சூர்யா ஜோடியாக சயிஷா சைகல் நடிக்க, மோகன்லால், பாலிவுட் நடிகர் பொமன் இரானி, ஆர்யா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘அயன்’ மற்றும் ‘மாற்றான்’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தப் படத்தில் இணைந்துள்ளது சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணி.
‘காப்பான்’ படத்துக்குப் பிறகு, ‘இறுதிச்சுற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா. 2டி என்டெர்டெயின்மென்ட்ஸ் சார்பில் சூர்யாவே தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது.
தற்போது லொகேஷன் பார்ப்பதற்காக ஒளிப்பதிவாளருடன் சண்டிகர் சென்றுள்ளார் சுதா கொங்கரா. மேலும், அமெரிக்காவிலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.