தமிழ் சினிமா

ரஜினிக்கு சொல்லப்பட்ட இந்தியன் கதை: வசந்தபாலன் சுவாரஸ்யப் பகிர்வு

செய்திப்பிரிவு

கமல் - ஷங்கர் கூட்டணியில் வெளியான 'இந்தியன்' திரைப்படத்தின் கதை முதலில் ரஜினிக்கு சொல்லப்பட்டது என்றும், படத்தின் பெயர் முதலில் 'பெரிய மனுஷன்' என வைக்கப்பட்டிருந்ததாகவும் இயக்குநர் வசந்தபாலன் பகிர்ந்துள்ளார்.

'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. 1996-ம் ஆண்டு வெளியான முதல் பாகம் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றது. கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது.

'இந்தியன்' படம் எப்படி உருவானது என்றும், அதில் நடிக்க முதலில் யார் யாரெல்லாம் பரிசீலனையில் இருந்தார்கள் என்றும் அப்போது இயக்குநர் ஷங்கர் அணியில் உதவி இயக்குநராக இருந்த வசந்தபாலன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

"நேற்று இணையத்தில் 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்க இருக்கிறது என்ற செய்தியைப் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி. இந்தியன் தாத்தாவின் ,கத்திக்கு இரையாக ஊழலும் லஞ்சமும், வரிந்து கட்டிக்கொண்டு காத்திருக்கிறது. என் குருவிற்கு வாழ்த்துகள்.

இந்த நேரத்தில் 'இந்தியன்' திரைப்படம் தொடங்கிய தருணம் ப்ளாஷ்பேக்.ப்ளாஷ்பேக்குன்னு சொன்னவுடனே ,வேறு தளத்திற்கு தாவிவிடாதீர்கள்.கொஞ்சம் வெயிட்.sweet memories.

'ஜென்டில்மேன்' திரைப்படத்தின் மும்மொழி வெற்றி சூப்பர் ஸ்டார் ரஜினி,ஷங்கர் சாரை அழைத்தார். 1994-ம் ஆண்டு என்று நினைக்கிறேன். 'காதலன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு ,நடந்து கொண்டிருக்கிறது. எனக்கு ஏதாவது கதையிருக்கா ஷங்கர் என்று ரஜினி சார் கேட்க 'பெரிய மனுஷன்' என்ற தலைப்பில் ரஜினி சாருக்கான கதையை ஷங்கர் சார் உருவாக்கினார்.

உடனே அவரிடம் சொல்லப்பட்டது. அவர் மிக வியந்து பாராட்டினார். 'காதலன்' திரைப்படம் முடியும் தருவாயில் ரஜினி சாரின் பல படங்களின் கால்ஷீட் தேதிகள் இடிக்க ,உடனே படம் செய்ய முடியாமல் போனது.

'காதலன்' திரைப்படத்திற்குப் பிறகு ஷங்கர் சார் 'பெரிய மனுஷன்' கதையை தான் பண்ண வேண்டும் என்று உறுதியாக இருந்தார். கதையில் கதாநாயனுக்கு தந்தை மகன் என்ற இரு வேடங்கள். 

ஆகவே ரஜினி சாருக்கு அடுத்து கமல் சாருக்கு அந்தக் கதை சொல்லப்பட்டது.பல்வேறு சந்திப்புகள் நிகழ்ந்தன. ஒருவேளை கமல் நடிக்க மறுத்தால் ,என்ன செய்வது என்று எண்ணி பிளான் பி தயாரானது. தெலுங்கு கதாநாயகர்கள் நாகார்ஜீனா அல்லது வெங்கடேஷை மகனாக நடிக்க வைக்கலாம். டாக்டர் ராஜசேகரை தாத்தா வேடத்தில் நடிக்க வைக்கலாம்.தெலுங்குப் படமாக மாறிடுமே என்று கவலைப்பட்டோம்.

ஷங்கர் சாருக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் இருக்கிறது என்ற சமாதானப் பேச்சும் உலா வந்தது. நமக்கு தெலுங்கு தெரியாது. நம்மைக் கழட்டிவிட்டு விடுவார்கள் என்ற பயம் எனக்கு.

கடவுளே எப்படியாவது கமல் சார் ஓகே சொல்லிவிடவேண்டும் என்று டைரக்டர்ஸ் காலனியில் உள்ள விநாயகரை வேண்டிக்கொண்டேன்.

நடிகர் கார்த்திக்கை வைத்து தொடங்கலாம் சத்யராஜ் தாத்தா கேரக்டர் என்று பலவிதமான யோசனைகளை நானும் இணை இயக்குநர்களும் வாரி வழங்கினோம்.ஒருவழியாக கமல் சார் நடிப்பது முடிவானது. விநாயகர் கருணையால் நடந்தது என்று நான் நம்பி வெடலைத் தேங்காய் போட்டேன்" என வசந்தபாலன் பகிர்ந்துள்ளார். 

'ரோபோ' கதை முதலில் கமலை வைத்து தொடங்கப்பட்டு, பின் நிறுத்தப்பட்டு, சில வருடங்கள் கழித்து அது ரஜினி நடிப்பில் எந்திரன் ஆனது குறிப்பிடத்தக்கது. 

SCROLL FOR NEXT