'சின்ன வீடு' படத்தின் 2-ம் பாகத்தை இயக்க பாக்யராஜ் திட்டமிட்டு வருகிறார்.
'சின்ன வீடு', 'மெளன கீதங்கள்', டார்லிங் டார்லிங், 'முந்தானை முடிச்சு', 'தாவணி கனவுகள்', 'இன்று போய் நாளை வா' உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் கே.பாக்யராஜ். 2010-ம் ஆண்டு 'சித்து +2' படத்தை இயக்கினார். அப்படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை.
அதனைத் தொடர்ந்து பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். தற்போது மீண்டும் படம் இயக்க ஆயுத்தமாகி வருகிறார் கே.பாக்யராஜ். அவரது இயக்கத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'சின்ன வீடு' படத்தின் 2-ம் பாகத்தை இயக்கவுள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் அவரே நடிக்க முடிவு செய்து, இதர கதாபாத்திரங்களுக்கு நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
1985-ம் ஆண்டில் பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான படம் 'சின்ன வீடு'. பாக்யராஜே இயக்கி நாயகனாகவும் நடித்திருந்தார். கல்பனா நாயகியாக நடித்திருந்தார். விருப்பமின்று மிகவும் குண்டாக இருக்கும் பெண்ணை திருமணம் செய்து தவிக்கும் இளைஞன் பாதை மாறிச் செல்கிறான். அதனால் ஏற்படும் பிரச்சினைகளை மையப்படுத்தி 'சின்ன வீடு' கதைக்களம் இருக்கும்.
சின்ன வீடு 2 தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.