தமிழ் சினிமா

125 கோடி வசூல்; அஜித் ரசிகர்களின் பாசம்: விஸ்வாசம் விநியோகஸ்தர் ராஜேஷ் நெகிழ்ச்சி

ஸ்கிரீனன்

125 கோடி வசூல் மற்றும் அஜித் ரசிகர்களின் பாசம் குறித்து 'விஸ்வாசம்' விநியோகஸ்தர் ராஜேஷ் நெகிழ்ச்சியுடன் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, ஜெகபதி பாபு, ரோபோ ஷங்கர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'விஸ்வாசம்'. சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஜனவரி 10-ம் தேதி ரஜினி நடிப்பில் வெளியான 'பேட்ட' படத்துடன் வெளியானது 'விஸ்வாசம்'. இரண்டில் எது வசூல் அதிகம் என்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது. இரண்டு படக்குழுவினருமே போட்டி போட்டு வசூலை அறிவித்துள்ளனர்.

'விஸ்வாசம்' படம் 125 கோடி வசூல் என்று கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் அறிவிப்பு திரையுலகினர் பலரையும் ஆச்சர்யப்படுத்தியது. இந்த அறிவிப்பு குறித்து கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் ராஜேஷ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

விடுமுறை காலங்களுக்கு 2 படம் வரலாம் என்று 'பேட்ட' மற்றும் 'விஸ்வாசம்' படங்களின் வசூல் நிரூபித்துவிட்டது. இரண்டு படங்களுமே நல்லபடியாக தான் போய் கொண்டிருக்கிறது. என்னைப் பற்றி மீம்ஸ்களை எல்லாம் நான் ஜாலியாக தான் எடுத்துக் கொள்கிறேன். ஒரு படம் நல்லபடியாக போய், இன்னொன்று நல்லபடியாக போகவில்லை என்றால் தான் பிரச்சினை. ஆனால், இரண்டுமே நல்லபடியாக தானே போய் கொண்டிருக்கிறது.

அவங்க ஒன்று போடுகிறார்கள், என்னுடைய டீம் ஒன்று போடுகிறார்கள். இதெல்லாம் ஜாலியாக எடுத்துக் கொள்ளவேண்டும். இது கிடையாது சினிமா. நல்ல விஷயம் என்னவென்றால், இரண்டு படங்களின் வசூல் மூலம் பெரிய மார்க்கெட் ஒன்று திறந்துள்ளது. அடுத்தாண்டு பொங்கல் வெளியீடு இன்னும் பெரிதாக இருக்கும்.

125 கோடி வசூல் என்று போட்டேன்.  அதில் எவ்வளவு ஷேர், எவ்வளவு வந்தது என்று கேட்டு வருகிறார்கள். என் அலுவலகம் வாருங்கள், அனைத்தையும் எடுத்துக் கொடுக்கிறேன். யாரோ ஒருவர் இந்தப் படம் இவ்வளவு வசூல் என்று சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதை விட படம் வாங்கிய நானே சொல்கிறேன். நம்பித்தானே ஆகணும்.

அஜித் ரசிகர்கள் மாஸ் காட்டி விட்டார்கள். என்னைத் தூங்கவிடவில்லை. என்ன ஒரு அறிவிப்பு கொடுத்தாலும், அதற்கொரு கொண்டாட்டம். இந்த தியேட்டரில் ஏன் படம் போடவில்லை என்று கேட்கிறார்கள். நிறைய திரையரங்குகள் அதிகரித்ததற்கு காரணமே அஜித் ரசிகர்கள் தான்.

இவ்வாறு கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT