எனது வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனை இது என்று அனிஷாவுடனான திருமணத்தை உறுதி செய்துள்ளார் விஷால்
நடிகர் விஷாலின் திருமணம் தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. ஆனால், விஷால் தரப்பிலிருந்து அனைத்தையுமே மறுத்து வந்தார்கள்.
நேற்று (ஜனவரி 15) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனிஷா ரெட்டி என்ற நடிகை, விஷாலுடனான திருமணத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்தார். இவர் தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பது நினைவுகூரத்தக்கது.
விஷால் - அனிஷா இருவருக்கும் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானாலும், இது தொடர்பாக விஷால் எதையுமே அறிவிக்காமல் மவுனம் காத்து வந்தார்.
இந்நிலையில், முதல் முறையாக தனது ட்விட்டர் பக்கத்தில் திருமணத்தை உறுதி செய்துள்ளார் விஷால். இது தொடர்பாக, “ஆம்.. மகிழ்ச்சி... மிக்க மகிழ்ச்சி... பெண்ணின் பெயர் அனிஷா அல்லா. அவர் சரியென்று சொல்லிவிட்டார். எங்களது திருமணம் முடிவாகிவிட்டது. என்னுடைய வாழ்வில் மிகப்பெரும் திருப்புமனை இதுதான். விரைவில் திருமண தேதியை அறிவிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
விஷாலைத் திருமணம் செய்யவுள்ளது குறித்து அனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ஒரு புதிய விஷயத்தின் தொடக்கம். அனைவருக்கும் நன்றி. எனது வளர்ச்சி, எனது கற்றல், எனது அவதானிப்புகள், எனது உந்து சக்தி, எனது உண்மை, எனது வலி, எனது வலிமை என அனைத்திலும் ஒரு பங்கெடுத்து, நான் இன்று இந்த நிலைமையில் இருக்கக் காரணமாக இருக்கிறீர்கள். விரைவில் நான் புதிய பயணத்தை ஆரம்பிப்பேன். எனது கனவு, லட்சியங்கள், சவால்கள் என அனைத்தையும் சாதிக்க முயற்சிப்பேன்.
வாழ்க்கையென்னும் பாதையில் இணைந்து பயணிக்க ஒருவரைக் கண்டுபிடித்துவிட்டேன். அவரையும், அவருடனான வாழ்க்கையையும் உணர்ச்சிகரமாக விரும்புகிறேன். இந்த மனிதர் தோள் கொடுக்கும் விஷயங்களுக்காக, அவரது நல்ல மனதிற்காக நான் அவரை அண்ணாந்து பார்க்கிறேன். என்னால் எவ்வளவு சிறப்பாக இருக்க முடியுமோ அப்படி இருப்பேன் என உறுதி கூறுகிறேன். எனது நோக்கம் சேர்ந்து கற்பது, அன்பு செலுத்துவது, நற் பண்புகளை தெரிந்து கொள்வது என்பதே” என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது வெங்கட் மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் 'அயோக்யா' படத்தில் நடித்து வருகிறார் விஷால். அதனைத் தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.