தமிழ் சினிமா

நீயெல்லாம் என் தம்பியா? - விஜய் குறித்து சீமான் பேச்சு; ரசிகர்கள் காட்டம்

செய்திப்பிரிவு

சமீபத்தில் பொது மேடையில் சீமான் பேசிய பேச்சு, விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை உண்டாக்கியுள்ளது.

2008-ம் ஆண்டு சீமான் இயக்கத்தில் வெளியான படம் 'வாழ்த்துகள்'. அப்படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. அதற்குப் பிறகு தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்ததால், திரையுலகில் படம் இயக்கும் பணியிலிருந்து மட்டும் விலகியிருந்தார்.

அவ்வப்போது, பல படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் சீமான். மேலும், பல வருடங்களாக விஜய் நடிக்க சீமான் படமொன்றை இயக்கவுள்ளதாகவும், 'பகலவன்' என்ற தலைப்பு வைக்கப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

இதனை பல பேட்டிகளில் உறுதி செய்துள்ளார் சீமான். ஆனால், தற்போது சிம்பு நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் சீமான். இதன் பணிகள் விரைவில் துவங்கவுள்ளது. சீமான் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் 'நாம் தமிழர் கட்சி' பொதுக்கூட்டத்தில் விஜய்யை கடுமையாக சாடிப் பேசியிருப்பது சர்ச்சையாக உருவாகியுள்ளது.

விஜய் குறித்து சீமான், "என் தம்பி ஒருத்தன் இருக்கான் விஜய். சர்கார் படத்தில் வசனம் பேசினால், பேசினோம் என்று சொல்லணும்ல. “அம்மா ஜெயலலிதா மீது நான் மிகவும் பற்றுக் கொண்டவன்” (விஜய் மாதிரியே கையைக் கட்டிக் கொண்டு பேசுகிறார்). நீயெல்லாம் என் தம்பியா?. எடப்பாடி பழனிசாமிக்கெல்லாமா பயப்படுவது?. உன் மீது பெரிய மரியாதை வைச்சுருந்தேன்டா. என்ன இப்படி ஆயிட்ட.

முதல்வரைப் போய் சந்தித்து நேரம் கேட்டு என்ன பண்ணுவது? அதுவே ஒரு அடிமை. மோடி அடிமை. 6 மாதம் கழித்து பதவியிலிருந்து கீழே இறங்கினால், பக்கத்து வீட்டுக்காரர் கூட அவரை மதிக்க மாட்டார். நீ போய் அவரை எல்லாம் பார்த்து.. ச்சீ... ஒரு விரல் புரட்சியாம்.. என்ன புரட்சி... வறட்சி... என் படத்துல நடிக்க மாட்டார். ஆனால், நான் பேசுறதை எல்லாம் பேசிட்டு இருப்பார்." என்று பேசியுள்ளார்.

'பகலவன்' படத்திலிருந்து விஜய் விலகியுள்ள கோபத்தில் இவ்வாறு சீமான் பேசியுள்ளார் என்று விஜய்க்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள். மேலும், விஜய் ரசிகர்களோ பல மேடைகளில் விஜய்யை புகழ்ந்து பேசியிருக்கும் வீடியோவை ஷேர் செய்து, சீமானை கடுமையாக சாடிவருகிறார்கள்.

ட்விட்டர் தளத்திலும் சீமானை திட்டும் விதமாக இரண்டு ஹேஷ்டேக்குகளை உருவாக்கு இந்தியளவில் ட்ரெண்ட் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT