வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 4 புதுப்படங்களை ஒளிபரப்புகிறது விஜய் டிவி. ‘செக்கச்சிவந்த வானம்’, ‘வடசென்னை’, ‘பரியேறும் பெருமாள்’, ‘சாமி ஸ்கொயர்’ ஆகிய இந்த 4 படங்களையும் விஜய் டிவி ஒளிபரப்ப இருக்கிறது.
மணிரத்னம் இயக்கியுள்ள ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில், அரவிந்த் சாமி, ஜோதிகா, விஜய் சேதுபதி, அருண் விஜய், சிம்பு, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா எரப்பா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘மழைக்குருவி’ பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்த இந்தப் படம், கடந்த வருடம் செப்டம்பர் 27-ம் தேதி ரிலீஸானது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’, சாதி ஆதிக்கத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. கடந்த வருடம் எல்லாத் தரப்பு மக்களாலும் கொண்டாடப்பட்ட இந்தப் படத்தை, இயக்குநர் பா.இரஞ்சித் தன்னுடைய நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்தார். கதிர், ஆனந்தி, யோகி பாபு, மாரிமுத்து உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம், செப்டம்பர் 28-ம் தேதி ரிலீஸானது.
வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘வடசென்னை’. அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிஷோர், பவண், ராதாரவி எனப் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில், சித் ஸ்ரீராம் குரலில் ‘என்னடி மாயாவி நீ’ பாடல், கேட்பவர்களைக் கிறங்க வைத்தது. மொத்தம் 3 பாகங்களாக உருவாகும் ‘வடசென்னை’யின் முதல் பாகம், அக்டோபர் 17-ம் தேதி ரிலீஸானது.
‘சாமி’ படத்தின் தொடர்ச்சியாக வெளியான படம் ‘சாமி ஸ்கொயர்’. ஹரி இயக்கிய இந்தப் படத்தில், விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா, ஜான் விஜய் உள்ளிட்டப் பலர் நடித்தனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஆக்ஷன் த்ரில்லர் வகையைச் சேர்ந்த இந்தப் படம், செப்டம்பர் 21-ம் தேதி ரிலீஸானது.