தமிழ் சினிமா

விஷால் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு

செய்திப்பிரிவு

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும் விஷால் மீது அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டை வைத்துள்ள ஏ.எல்.அழகப்பன், சுரேஷ் காமாட்சி, ஜே.கே.ரித்தீஷ், எஸ்.வி.சேகர் உள்ளிட்ட உறுப்பினர்கள், நேற்று முன்தினம் (புதன்கிழமை) தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்துக்குப் பூட்டு போட்டனர்.

நேற்று (வியாழக்கிழமை) அந்தப் பூட்டைத் திறக்க விஷால் முயற்சித்தபோது, அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸாருக்கும் விஷாலுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், விஷால், மன்சூரலிகான் உள்ளிட்டவர்கள் பாண்டி பஜார் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட விஷால் மீது இரண்டு பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாகக் கூடுதல், தகராறில் ஈடுபட்டு அமைதியைக் குலைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் விஷால் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பின்னர், நேற்று மாலை விஷால் விடுவிக்கப்பட்டார். அதன்பிறகு, அண்ணா சாலை ஃபிலிம் சேம்பர் வளாகத்தில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில், தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார் விஷால். அப்போது, ஜே.கே.ரித்தீஷ் ஆதரவாளர்களுக்கும் விஷாலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் இருதரப்பினரும் புகார் அளித்தனர். இதனையடுத்து, இருதரப்பினர் மீதும் 145-வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் சங்க விவகாரம் தொடர்பாக பாண்டி பஜார் காவல் நிலையத்தில் விஷால் மீது ஏற்கெனவே இரண்டு வழக்குகள் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT