தமிழ் சினிமா

அப்பாவின் ஆசை; தன்னைக் காப்பாற்றிய சம்பளம்: ஷங்கர் கூறிய ஃப்ளாஷ்பேக்

ஸ்கிரீனன்

அப்பாவின் ஆசை, தன்னைக் காப்பாற்றிய சம்பளம் உள்ளிட்ட பல விஷயங்களை இயக்குநர் ஷங்கர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் '2.0'. லைகா நிறுவனம் இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்து வெளியிட்டுள்ளது. தமிழகம் தவிர்த்து இதர மொழிகளிலும், வெளிநாடுகளிலும் நல்ல வசூல் செய்து வருவது '2.0'.

இப்படம் தொடர்பாக அளித்துள்ள பேட்டியில், ஆரம்ப காலகட்டத்தில் தான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பதைத் தெரிவித்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.

மாதச் சம்பளம், அப்பாவின் ஆசை குறித்து இயக்குநர் ஷங்கர் கூறியிருப்பதாவது:

''டி.எம்.இ. படிச்சி முடிச்சிட்டு, ஒரு ஃபேக்டரில வேலைக்குப் போயிக்கிட்டிருந்தேன். நல்லவேளையா ஸ்டிரைக் நடந்து ஃபேக்டரியை மூடிட்டாங்க. எனக்கோ சினிமாவுக்குள்ளே போகணும்னு ஆசை. ஆனா அப்பாவுக்கு நான் சினிமாவுக்குள்ளே போறதுல விருப்பமில்லை. அம்மாவுக்கும் கிட்டத்தட்ட அப்படித்தான். அப்ப, அம்மா செஞ்சதை மறக்கவே முடியாது.

அம்மாவுக்கு இங்கிலீஷ்லாம் பெருசா தெரியாது. ஆனாலும் பேப்பர்ல டி.எம்.இ. படிப்புக்கு ஆட்கள் தேவை விளம்பரம் வந்துருக்கானு பாத்துக்கிட்டே இருப்பாங்க. இங்கிலீஷ்ல வந்திருக்கிற அந்த விளம்பரங்களை, கஷ்டப்பட்டு, கண்டுபிடிச்சு, எங்கிட்டக் காட்டுவாங்க. ‘இந்தக் கம்பெனில வேலை இருக்குன்னு போட்டிருக்குடா’ன்னு சொல்லுவாங்க. எனக்கு ஆச்சரியமா இருக்கும்.

இந்த சமயத்துல நாடகங்கள்ல நடிச்சிக்கிட்டு இருந்தேன். அதைப் பார்த்துட்டு, எஸ்.ஏ.சந்திரசேகரன் சார், என்னை சினிமாவுக்குள்ளே கொண்டு வந்தாரு. அவர்கிட்ட உதவி டைரக்டரா சேர்ந்தேன். அப்பாவுக்கு சுத்தமா பிடிக்கல. ஒரு வேலைக்குப் போய் மாசம் பொறந்தா சம்பளம்னு இல்லாம, என்ன இவன் இப்படிப் பண்றான்னு வருத்தப்பட்டுக்கிட்டே இருந்தார்.

இந்த சமயத்துல எஸ்.ஏ.சந்திரசேகர் சாருக்கு தேங்க்ஸ் சொல்லணும். ஏன்னா, எவ்ளோ பிரச்சினைகள் இருந்தாலும், கஷ்டங்கள் இருந்தாலும் மாசாமாசம் 5ம் தேதியானா போதும், டாண்ணு சம்பளம் கொடுத்துருவார்.

இந்தச் சம்பளம் மாசாமாசம் குறிப்பிட்ட தேதியில கிடைக்குதுங்கறதால, அப்பாவுக்கு நிம்மதி. அதன் பிறகுதான், சினிமா வேலையை ஏத்துக்கிட்டாரு அப்பா. சொல்லப்போனா, அந்த 5-ம் தேதி சம்பளம்தான் என்னைக் காப்பாத்துச்சு''.

இவ்வாறு  இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT