தமிழ் சினிமா

திரை விமர்சனம்- துப்பாக்கி முனை

செய்திப்பிரிவு

மும்பையில் 33 என்கவுன்ட்டர் கள் செய்துவிட்டு, மனித உரிமை மீறல் குற்றச்சாட் டில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நேர்மையான போலீஸ் அதிகாரி விக்ரம் பிரபு. ஒரு தவறான புரிதலால் தன் அம்மா, காதலி இருவரையும்விட்டு பிரிகிறார். இந்த நிலையில், ராமேசுவரத்தில் நடந்த சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு அவரிடம் தரப்படுகிறது. அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிஹாரைச் சேர்ந்த ‘மிர்ச்சி’ ஷாவை என்கவுன்ட்டர் செய்யும் வேலையும் அவருக்கு கொடுக்கப்படுகிறது. உண்மை குற்றவாளிகள் வேறு சிலர் என்பதை அறிகிறார். நல்ல வரை தப்பிக்கவைத்து, கொடிய வர்களை சிக்கவைக்கும் பணியில் இறங்குகிறார். நாயகனும், பாதிக் கப்பட்ட சிறுமியின் தந்தையும் இதை எப்படி செய்கின்றனர் என்பதை சொல்கிறது படத்தின் மீதிக்கதை.

பெண் சிறார் மீதான பாலியல் வன்கொடுமைதான் படத்தின் கரு. ஆனால், பிரச்சார படமாக ஆக்கி விடாமல், விறுவிறுப்பாக நகர்த்தி, சலிப்பு தட்டாமல் தந்திருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்கு நர் தினேஷ் செல்வராஜ். ‘குற்ற வாளிகளை கொல்வது குற்றங் களைக் களைய எந்த விதத்திலும் உதவாது’ என்ற செய்தியையும் சொல்லியிருக்கிறார். குற்றம்சாட் டப்பட்ட அப்பாவி இளைஞன் ஒருபுறம், அந்தக் குற்றம் மூலம் தன் ஒரே மகளைப் பறிகொடுத்த தந்தை இன்னொருபுறம். இவர்கள் மூலம் தான் இதுவரை உறுதியாக நம்பிவந்த சித்தாந்தத்தின் பிழை களை உணரும் நாயகன் என புதுமையான கதைச் சூழலை உருவாக்கிய விதத்திலும் இயக்கு நரின் திறமை வெளிப்படுகிறது.

ஆனால் இந்த கதையை சொல் வதற்கான திரைக்கதையில் சில காட்சிகள் மட்டுமே சரியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மற்றபடி லாஜிக் பிழைகள், தேவையற்ற இடைச் செருகல்கள் ஏராளமாக இருக்கின்றன. மும்பை, டெல்லி, பிரதமர் அலுவலகம், பிஹார் - ஜார்க்கண்ட் எல்லைப் பகுதி என கதையில் வரும் அனைத்து இடங்களும் சம்பந்தமே இல்லாத வேறொரு இடத்தில் எடுக்கப்பட்டிருப்பது அப்பட்ட மாகத் தெரிகிறது. கதையின் போக்கில் நாயகனின் அம்மா சென்டிமென்ட் ஒட்டவே இல்லை. தவிர, பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பது குறித்த அக்கறையை வெளிப்படுத் தும் படத்தில் பாலியல் பலாத் காரக் காட்சியை விரிவாகக் காட்சிப்படுத்தியது தேவை யற்றது மட்டுமல்ல, கண்டிப்பாகத் தவிர்க்கப்பட்டிருக்க வேண் டியது.

தாடி, இறுக்கமான முகத்துடன் துப்பாக்கியோடு துடித்தெழும் பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்து கிறார் விக்ரம் பிரபு. எள் அளவும் மிகை நடிப்பின்றி பாத்திரம் அறிந்து பயணப்படுகிறார். நாயகி இருக்க வேண்டும் என்பதற்காகவே ஒருசில காட்சிகளில் வந்துபோகிறார் ஹன்சிகா. டூயட்கூட இல்லை. பிரதமர் அலுவலகத்தில் இருந்தபடி நாயகனுக்கு உதவும் காட்சிகளில் கவர்கிறார்.

சிறுமியின் அப்பாவாக வரும் எம்.எஸ்.பாஸ்கர், படத்தின் முக் கிய பாத்திரத்தை தாங்கி நிற் கிறார். அந்த எளிய மனிதரிடம் பீறிட்டு வரும் சமூக கோபம், மகளை பறிகொடுத்து தவிக்கும் தருணம் என நிறைவாய் செய்திருக் கிறார். வில்லனாக வரும் வேல ராமமூர்த்தி, தன் நடிப்பால் கொடூ ரத்தை கண்முன் கொண்டுவரு கிறார். செய்யாத குற்றத்துக்கு சாகப் போகிறோம் என்ற கையறுநிலையை சரியாக வெளிப்படுத்துகிறார் ஷா.

படத்தின் மொத்த கதையும் ராமேசுவரத்தைச் சுற்றி நகர்கிறது. அந்த அழகிய தீவை மேலும் அழகாக காட்டுகிறது ராசாமதியின் ஒளிப்பதிவு. எல்.வி.கணேஷின் பின்னணி இசை சில காட்சிகளில் கவனிக்க வைக்கிறது.

வழக்கமான படங்கள் போல மொத்த ஜகதலபிரதாபத்தையும் ஹீரோவின் தலையிலேயே ஏற்றாமல், பாதிக்கப்பட்ட அப்பாவி மனிதர் எம்.எஸ்.பாஸ்கரிடமும் ‘ரவுத்ரம் பொங்கும்’ என்று காட்டியிருப்பதை பாராட்டலாம்.

‘கொலைகளை பொதுச் சமூகம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளப் பழகிவிட்டது.. அனைத்து வயது ஆண்களிலும் பாலியல் வக்கிரர் கள் இருக்கின்றனர்.. குற்றவாளி களை கொல்வது, வேரை விட்டு கிளைகளை வெட்டுவது போன் றது..’’ என்பது போன்ற கருத்து களை சமூக அக்கறையோடு, இந்த காலகட்டத்தின் தேவை யறிந்து பதிவு செய்ததை பாராட்டலாம்.

SCROLL FOR NEXT