தமிழ் சினிமா

கடைசியில் விஜய் சேதுபதியிடம்தான் போய் நின்றேன்: இயக்குநர் பாலாஜி தரணீதரன்

செய்திப்பிரிவு

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன், மறுபடியும் விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ள படம் ‘சீதக்காதி’. இந்தப் படத்தில் வயதான நாடக நடிகர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. அவருடைய 25-வது படம் இது.

பேசன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. வருகிற 20-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாகிறது. இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் போர்டு உறுப்பினர்கள், படத்துக்கு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று (டிசம்பர் 13) காலை ‘சீதக்காதி’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசிய பாலாஜி தரணீதரன், “இந்தப் படத்தை உருவாக்கும்போது நான்  மிகவும் மகிழ்ந்த விஷயம், நாடகக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியதுதான். எல்லோரும் மிகவும் திறமைசாலிகள். இந்தப் படத்தில் நடித்த அவர்களைக் கவுரவிப்பதில் பெருமை கொள்கிறோம்.

இந்தக் கதையை நான் எழுதி 5 வருடங்கள் இருக்கும். கதையைப் புரிந்துகொண்ட தயாரிப்பாளர்கள் கிடைத்தது மிகப்பெரிய வரம். விஜய் சேதுபதியை என்னால் முதலில் இந்தக் கதாபாத்திரத்தில் நினைத்துப் பார்க்கவே இல்லை. கடைசியில் அவரிடம்தான் போய் நின்றேன், அவர் கதாபாத்திரமாகவே உருமாறி நின்றார்.

‘சீதக்காதி’ தான் என்னுடைய சிறந்த படம் என்று சொல்வேன். மௌலி, அர்ச்சனா, மகேந்திரன் ஆகியோருடன் நாடகக் கலைஞர்கள் அனைவரும் இந்தப் படத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். ரம்யா நம்பீசன், பார்வதி நாயர் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். லைவ் சவுண்டில் வேலை பார்த்தது மிகப்பெரிய அனுபவம்” என்றார்.

SCROLL FOR NEXT