நடிகர் 'சீனு' மோகன் மாரடைப்பு காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 61.
'கிரேசி' மோகனின் நாடகங்களில் சீனு என்ற கதாபாத்திரத்தில் நடித்துப் பிரபலமானவர் மோகன். 1979-ல் கிரேசி கிரியேஷன்ஸ் நாடகக் குழு ஆரம்பித்த நாட்களிலிருந்தே அதில் மோகன் இடம்பெற்றிருந்தார். 80-களின் இறுதியில், 'வருஷம் 16', 'அஞ்சலி', 'தளபதி' உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.
எனினும் தொடர்ந்து மேடை நாடகங்களுக்கே முன்னுரிமை கொடுத்து தொடர்ந்து அதில் நடித்து வந்தார். தொடர்ந்து 'கிரேசி' மோகன் குழு தொலைக்காட்சி தொடர்கள் எடுத்த போது அதிலும் சீனு கதாபாத்திரத்தில் மோகன் நடித்து வந்தார். கிட்டத்தட்ட 3000க்கும் அதிகமான மேடை நாடகங்களில் மோகன் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பல குறும்படங்களிலும் மோகன் நடித்துள்ளார்.
2016-ஆம் ஆண்டு 'இறைவி' படத்தில் இவரது நடிப்பு பாராட்டப்பட்டது. அடுத்தடுத்து 'ஆண்டவன் கட்டளை', 'கோலமாவு கோகிலா' உள்ளிட்ட படங்களிலும் மோகன் நடித்தார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றி வந்தார்.
ஏற்கெனவே சிறுநீரகப் பாதிப்புக்குள்ளாகியிருந்த மோகன், அதற்கான சிகிச்சையை மேற்கொண்டிருந்தார். டிசம்பர் 27, வியாழக்கிழமை காலை, தீவிர மாரடைப்பின் காரணமாக மோகன் காலமானார்.