சபரிமலைக்கு சென்ற பெண்களை தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாகச் சாடியுள்ளார் காயத்ரி ரகுராம்
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்லத் தடை இருந்தது. இதை நீக்கி அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவைச் செயல்படுத்த கேரள அரசு தயாராக உள்ளது. ஆனால், இந்த உத்தரவுக்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட சில அமைப்புகளும் பக்தர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். இதனால் இதுவரை சபரிமலைக்குச் செல்ல முயன்ற பெண்கள் யாரும் ஐயப்பனை தரிசிக்க முடியவில்லை.
சென்னையைச் சேர்ந்த ‘மனிதி’ அமைப்பைச் சேர்ந்த பெண்கள் 11 பேர் டிசம்பர் 23-ம் தேதி பம்பை சென்றடைந்தனர். அவர்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியதால் பதற்றம் நிலவியது. சுமார் 10 மணி நேரத்துக்குப் பிறகு அப்பெண்கள் ஐயப்பனை தரிசிக்காமலேயே சென்னை திரும்பினர்.
இந்த விவகாரம் தொடர்பாக சபரிமலை சென்ற பெண்களை கடுமையாகச் சாடியுள்ளார் காயத்ரி ரகுராம். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:
''ஐயப்பன் சார்ந்த சம்பிரதாயங்களையும், பாரம்பரியத்தையும் நம்பாத பெண்கள் ஏன் சபரிமலைக்குச் செல்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. நீங்கள் நம்பிக்கையில்லாதவர்கள் என்று ஆன பின்னும் பிடிவாதமாகச் செல்வது ஏன்? அரசியல் காரணங்கள். (பிரச்சினை வந்து) பின்வாங்குகிறீர்கள்.
என்ன நிரூபிக்கிறீர்கள் பெண்களே? நீங்கள் ஐயப்பன் மீது நம்பிக்கை கொண்டவர் என்றால் 40 வயது ஆகும் வரை காத்திருங்கள். அதுதான் பல வருடங்களாக பின்பற்றப்பட்டு வருகிறது''.
இவ்வாறு காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.