தமிழ் சினிமா

சின்மயி சொன்னது உண்மைதான்; ராதாரவிக்கு டத்தோ பட்டம் கொடுக்கவில்லை!- கைவிரித்த மெலாகா அரசு

செய்திப்பிரிவு

பாடகி சின்மயி சொன்னது உண்மைதான். தமிழ்த் திரைப்பட நடிகர் ராதாரவிக்கு மலேசியாவின் மெலாகா அரசின் சார்பில் டத்தோ பட்டம் வழங்கப்படவில்லை என்று அம்மாநில உயரதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்னதாக, பாடகி சின்மயி, நடிகர் ராதாரவி தனது பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்ளும் டத்தோ பட்டமே பொய் என்று கூறினார்.

இது குறித்து தான் சம்பந்தப்பட்ட மெலாகா அரசுக்கு இமெயில் அனுப்பியதாகவும். அதற்கு மெலாகா முதல்வரின் பொது விவகாரத் துறைக்கான சிறப்புச் செயலர் பிரசாந்த் குமார் பிரகாசம் பதில் அனுப்பியதாக ஒரு இமெயிலையும் தனது ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.

அந்த பதிலஞ்சலில்,

மதிப்பிற்குரிய சின்மயி ஸ்ரீபதா

நான் ஏற்கெனவே,  மெலாகா அரசின் நிர்வாகத் துறையிடம் விளக்கம் கேட்டுவிட்டேன். அதன்படி திரு.ராதாரவி என்ற நடிகருக்கு அந்த மாநில அரசு எந்த விருதினையும் வழங்கவில்லை. அவரது பெயர் எங்களது அரசு ஆவணங்களில் இல்லை.

அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள நடிகர் ஷாருக் கானுக்கு மட்டுமே அந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.

இந்தப் பிரச்சினையை நாங்கள் உன்னிப்பாகக் கவனிக்கிறோம். ஏனெனில் ராதாரவி இந்தப் பட்டத்தை தனது பெயருக்கு முன்னால் தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

மெலாகா அரசின் முதல்வர் யாக் தவுன் ஹாஜி அடி பின்னிடம் இது குறித்து புகார் தெரிவித்து இதன் மீது நடவடிக்கையோ அல்லது தீர்வோ எட்டப்படும்.

இதைப் பற்றி எங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்ததற்கு மிகுந்த நன்றி.

பிரசாந்த் குமார் பிரகாசம்

மெலாகா முதல்வரின் பொது விவகாரத்துறைக்கான சிறப்புச் செயலர்.

என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், மலாய் மெயில் (Malay Mail) என்ற மலேசிய நாட்டு பத்திரிகைக்கு பேட்டியளித்த பிரசாந்த் குமார் பிரகாசம், "ஆம்.ராதாரவி அந்தப் பட்டத்தைப் பெறவில்லை. எங்களது அரசு ஆவணங்களில் அவரது பெயர் இல்லை. இதுதொடர்பாக தென்னிந்திய பாடகி சின்மயி ஸ்ரீபதாவின் மின்னஞ்சலுக்கு நான் பதிலும் அனுப்பியுள்ளேன். விரைவில் மெலாகா முதல்வர் அலுவலகம் இது சார்ந்த அறிக்கை ஒன்றை வெளியிடும்" எனக் கூறியிருக்கிறார்.

SCROLL FOR NEXT