'மரணமாஸ்' பாடல் எப்படி உருவானது என்பதற்கான சின்ன வீடியோ ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
'2.0' படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் 'பேட்ட'. இப்படத்தின் பாடல்கள் டிசம்பர் 9-ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கு முன்பாக இன்று (டிசம்பர் 3) ஒரு பாடலும், 7-ம் தேதி ஒரு பாடலும் வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது.
'மரணமாஸ்' என்ற தலைப்பில் உருவாகியுள்ள பாடல் இன்று ( டிசம்பர் 3) வெளியாகவுள்ளது. இப்பாடல் குத்துப்பாட்டு வகையில் இருக்கும் என்றும், நீண்ட நாட்கள் கழித்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இப்பாடலை பாடியிருக்கிறார் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.
இன்று (டிசம்பர் 3) மாலை 6 மணியளவில் 'மரணமாஸ்' பாடல் வெளியாகவுள்ள நிலையில், இப்பாடல் உருவான விதத்தை சிறுவீடியோவாக தற்போது சன் பிக்சர்ஸ் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
முழுக்க நாட்டுபுற வாத்தியக் கலைஞர்களை வைத்து அனிருத் உருவாக்கும் பாடல் காட்சி இந்த வீடியோவில் உள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
'பேட்ட' படத்தில் ரஜினிகாந்துடன், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
'பேட்ட' 2019-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.