தமிழ் சினிமா

சுசீந்திரன் ஏமாற்றி விட்டார்: ஒளிப்பதிவாளர் நட்ராஜ் ட்வீட்டால் சர்ச்சை

ஸ்கிரீனன்

இயக்குநர் சுசீந்திரன் தன்னை ஏமாற்றி விட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒளிப்பதிவாளர் நட்ராஜ் தெரிவித்துள்ளது சர்ச்சையாகியுள்ளது.

இந்திய திரையுலகில் முக்கியமான ஒளிப்பதிவாளராக வலம் வருபவர் ஒளிப்பதிவாளர் நட்ராஜ். 'மிளகாய்', 'சதுரங்க வேட்டை' உள்ளிட்ட சில படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார் நட்ராஜ். இவரை அனைவருமே 'நட்டி' என்று அழைப்பார்கள்.

நேற்று (டிசம்பர் 25) மாலை தனது ட்விட்டர் பக்கத்தில் “என் வாழ்க்கையின்...... ஜீவா படத்தில் பாடலுக்கு நடித்தது.... தவறான முயற்சி..... காரணம், சுசீந்திரன் இயக்குநர். சுசீந்திரன் மற்றும் அவரது மேலாளர் ஆண்டனி என்னை ஏமாற்றிவிட்டனர்” என்று ட்வீட் செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் நட்ராஜ்.

முன்னணி இயக்குநர் சுசீந்திரன் குறித்து நட்ராஜ் வெளியிட்ட இந்தப் பதிவு பெரும் சர்ச்சையாக உருவாகியுள்ளது. என்ன காரணத்தினால் இதைச் சொல்லியுள்ளார் என்ற தகவலை அவர் வெளியிடவில்லை.

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த 'ஜீவா' படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நட்ராஜ் நடனமாடியிருந்தார். இச்சமயத்தில் ஏதாவது நடந்திருக்கலாம் எனத் தெரிகிறது.

இது தொடர்பாக நட்ராஜை தொடர்பு கொண்டு கேட்ட போது, "இதற்கு மேல் இது தொடர்பாக நான் பேசுவது சரியாக இருக்காது. வேண்டாமே" என்று கூறினார்.

SCROLL FOR NEXT