'இந்தியன் 2' திரைப்படத்துக்குப் பிறகு சினிமாவில் இருந்து விடைபெறுவேன் என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்துகொண்ட கமல்ஹாசன் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், ''எங்களின் மக்கள் நீதி மய்யம் கட்சி மேற்கொண்டுள்ள பணிகளுக்கு இடையே ‘இந்தியன் 2’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறேன். இந்தப் படம்தான் என்னுடைய திரையுலகப் பயணத்தில் கடைசிப் படமாக இருக்கும்.
முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதால் ‘இந்தியன் 2’ படத்துக்குப் பிறகு சினிமாவில் இருந்து விடைபெற்று விடுவேன். நடிப்பில் இருந்து நான் ஒதுங்கிவிட்டாலும் என்னுடைய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து சினிமாவில் பங்களிப்பைச் செலுத்தி வரும்.
'இந்தியன் 2' படப்பிடிப்பு பணிகள் விரைவில் முடிந்ததும் எனது அரசியல் பணி முழு நேரமாக மாறும். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்'' என்று தெரிவித்தார்.