தமிழ் சினிமா

ஆர்.கே.நகர் தேர்தலில் ஏன் நிற்கவில்லை? - கங்கை அமரன் கிண்டல் பதில்

செய்திப்பிரிவு

ஆர்.கே.நகர் தேர்தலில் ஏன் நிற்கவில்லை என்ற கேள்விக்கு கங்கை அமரன் அளித்த பதில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சமீபகாலமாக புதிதாக வெளியாகும் பாடல்கள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துகள் தெரிவித்து வருகிறார் பாடலாசிரியர், இயக்குநர் மற்றும் இசையமைப்பாளருமான கங்கை அமரன்.

நேற்று (டிசம்பர் 10) மாலை யுவன் இசையில் உருவாகியுள்ள 'மாரி 2' படத்திலிருந்து இளையராஜா பாடியுள்ள பாடல் வெளியிடப்பட்டது. இதனைக் கேட்டுவிட்டு “ஆஹா அற்புதம் அன்பு தனுஷுக்கு பாராட்டுகள்.....!!  யுவன் அப்படியே அப்பாவைப் போலவே..... அழகான பாட்டு கண்ணுங்களா   !! வாழ்க” என்று தெரிவித்தார் கங்கை அமரன்.

இதற்கு 'மாரி 2' படக்குழுவினர் நன்றி தெரிவித்தார்கள். இதில் பின்னோட்டமாக வந்த கருத்துகளில் "சார். அந்த ஆர்.கே.நகர் தேர்தலில் ஏன் நிற்கவில்லை என்று சொல்லுங்க" என்று ஒருவர் கேள்வி எழுப்பினார். அவருக்குப் பதிலடியாக "கால் வலி கண்ணா" என்று கிண்டலுடன் பதிலளித்தார்.

இவரது பதிலை பலரும் செம பதில் என்று தெரிவித்தனர். இதனால், இந்த ட்வீட், ட்விட்டர் தளத்தில் ட்ரெண்டானது. இந்த பதிலுக்கு பிரேம்ஜி அமரன், நிதின் சத்யா உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, பாஜக சார்பில் ஆர்.கே.நகரில் போட்டியிட்டவர் கங்கை அமரன். பணப் பட்டுவாடா பிரச்சினையில் அந்த தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. அதற்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் கங்கை அமரன் போட்டியிடவில்லை. இதனை முன்வைத்தே கங்கை அமரனிடம் இந்தக் கேள்வியை எழுப்பினார்கள்.

SCROLL FOR NEXT