சினிமாவுக்கு அடுத்தபடியாக கார் மற்றும் ஹெலிகாப்டர் மீது அளவற்ற காதல் கொண்டவர் அஜித் என்பது எல்லோருக்கும் தெரியும். தனது ஓய்வு நேரங்களை இதற்காகத்தான் செலவழிப்பார் அஜித். சமீப காலமாக ஹெலிகாப்டர் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் கூட ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பை முடித்துவிட்டு ஜெர்மனிக்குப் பறந்துள்ளார். “அஜித்தின் ஆர்வங்களுக்கு எல்லைகள் இல்லை. தனது படப்பிடிப்பு முடிந்தவுடனேயே நடிகர் அஜித் குமார் எங்களுடன் சில நாட்கள் செலவிட ஜெர்மனிக்கு விமானம் ஏறிவிட்டார்.
வாரியோ ஹெலிகாப்டர்கள் மீது அவருக்கு ஆர்வம் அதிகம். அதேபோல், ரேஸ் கார்கள் மீதும். அவர் வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் அவர் முழு கவனம் கொடுக்கிறார், அன்புடன் இருக்கிறார். தான் தங்கும் ஹோட்டலில் கூடுதலாக ஒரு அறையை எடுத்து, அதில் தனது வாரியோ மாடல்களை உருவாக்குகிறார். பகல் பொழுதில் படப்பிடிப்பு முடித்துவிட்டு, மாலை நேரங்களில் இது அவருக்கு நல்ல மாறுதலாக இருக்கிறது” என வாரியோ ஹெலிகாப்டரின் முகநூல் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
அஜித் நடிப்பில் வருகிற பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கும் படம் ‘விஸ்வாசம்’. சிவா இயக்கியுள்ள இந்தப் படத்தில், அஜித் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ‘தூக்கு துரை’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அஜித். தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, டி.இமான் இசையமைத்துள்ளார். மதுரை மற்றும் தேனிப் பின்னணியை கதைக்களமாகக் கொண்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் ராஜமுந்திரியில் செட் போட்டு படமாக்கப்பட்டது.