தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும் விஷால் மீது அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டை வைத்துள்ள ஏ.எல்.அழகப்பன், சுரேஷ் காமாட்சி, ஜே.கே.ரித்தீஷ், எஸ்.வி.சேகர் உள்ளிட்ட உறுப்பினர்கள், நேற்று தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்துக்குப் பூட்டு போட்டனர்.
மேலும், தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமியைச் சந்திக்க, நேற்றிரவு பசுமை வழிச் சாலையில் இருக்கும் முதல்வர் இல்லத்துக்குச் சென்றனர். ஆனால், அப்போது அவர்களைச் சந்திக்க மறுத்த முதல்வர், இன்று காலை தலைமைச் செயலகத்தில் சந்திப்பதாகக் கூறினார்.
அதன்படி, இன்று முதல்வரைச் சந்தித்து, அவரிடம் சில கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழக மக்களின் நல்வாழ்விற்காக பல நலத்திட்ட உதவிகளை வழங்கியும், பென்னெடுங்காலமாய் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படாமல் இருந்த திரையரங்குகளின் அனுமதிச்சீட்டு விலையை முறைப்படுத்தியும், நலிந்த தயாரிப்பாளர்களின் நலனுக்காக சிறு முதலீட்டுப் படங்களுக்கு மானியம் வழங்கியும் திரைத்துறையினரை கனிவோடு காத்துவரும் தமிழக முதல்வரிடம், தயாரிப்பாளர்களைக் காப்பாற்றும் விதமாக சில கோரிக்கைகளை இங்கு சமர்ப்பிக்கிறோம்.
1. அம்மா அரசு அறிவித்த அம்மா திரையரங்குகளை விரைந்து உருவாக்கித் தரவேண்டும்.
2. தமிழ்நாட்டிலுள்ள அனைத்துத் திரையரங்கங்களின் அனுமதிச்சீட்டு விற்பனையை, ஒருங்கிணைந்த கணினி மூலம் பதிவுசெய்யும் முறையைக் கொண்டு வரவேண்டும்.
3. வருடம்தோறும் தமிழக அரசால் வழங்கப்படும் மானியத்தொகையை, விடுபட்டுப்போன சிறுபட நலிந்த தயாரிப்பாளர்களுக்கும் வழங்கி, அவர்கள் வாழ்விலும் ஒளிவீசிடச் செய்ய வேண்டும்.
4. தமிழ்ப் படமெடுத்து இன்று வறுமையில் வாடும் நலிந்த தயாரிப்பாளர்களுக்கு, தங்க அரசின் மூலம் மாதம்தோறும் உதவித்தொகை வழங்க வேண்டும்.
5. சில வருடங்களாக வழங்கப்படாமல் இருந்த தமிழக அரசின் திரைப்பட விருதுகளை, சிறப்பான விழா எடுத்து வழங்கி கவுரவிக்க வேண்டும்.
மேலும், உதவித் தலைவர்கள் இரண்டு பேர் கடந்த 15 மாதங்களாக சங்கம் சார்ந்த எந்த நிகழ்விலும் பங்கெடுப்பதில்லை. சென்ற நிர்வாகக்குழு விட்டுச்சென்ற காப்பீட்டுத் தொகை 7.85 கோடி ரூபாய் பொதுக்குழுவின் ஒப்புதல் பெறாமல் செலவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, சிறப்பு அதிகாரியை நியமித்து, கூட்டுறவு சங்கத்துறை அதிகாரிகள் மூலம் கணக்கு வழக்குகளைச் சரிபார்க்க வேண்டும். இன்னும் 4 மாதங்களில் முறையான தேர்தலை நடத்த ஆவண செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.