தமிழ் சினிமா

தான் யார் என்பதை நிரூபித்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர்: இயக்குநர் அறிவழகன் புகழாரம்

செய்திப்பிரிவு

அன்றும் இன்றும் தான் யார் என்பதை நிரூபித்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர் சார் என்று அறிவழகன் புகழாரம் சூட்டியுள்ளார்.

ரஜினி நடிப்பில் கடந்த நவம்பர் 29-ம் தேதி ரிலீஸான படம் ‘2.0’. ஷங்கர் இயக்கியுள்ள இந்தப் படம், ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாகும். ஹீரோயினாக எமி ஜாக்சன் நடிக்க, வில்லனாக அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தைப் பார்த்த பெரும்பாலானவர்கள் பாராட்டி வருகிறார்கள். தொழில்நுட்பத்தில் மிகச்சிறந்த தமிழ்ப்படமாக இது இருக்கிறது என ஆச்சரியப்படுகின்றனர். அதேசமயம் படத்தின் திரைக்கதை குறித்து எதிர்மறையான விமர்சனங்களும் வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், 2.0 படம் குறித்து இயக்குநர் அறிவழகம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

''பிரம்மாண்டமான விஎஃப்எக்ஸ் காட்சிகளுக்கும், மிகப் பெரிய பட்ஜெட்டை நேர்த்தியாக கையாண்டதற்காகவும் நாம் நமது உண்மையான பாராட்டுகளை கனவுகளை நனவாக்கும் ஷங்கர் சாருக்கு சொல்லியே ஆக வேண்டும். இதுதான் படத்தின் ஆன்மாவைப் பற்றி பேசுவதற்கான தருணம்.

பிக்சார் அல்லது டிஸ்னி ஃபிலிம்ஸ் தயாரிப்புகளில் ஒரே ஒரு விஷயம் பொதுவானதாக இருக்கும். அவர்கள் குழந்தை ரசிகர்களை குறிவைத்து எடுக்கும் அனிமேஷன் திரைப்படங்கள் எல்லாம் சொல்லி வைத்ததுபோல் குழந்தைகளுக்கு உலகப் பொது மறை ஒன்றை போதிப்பதாக இருக்கும். 

ஆனால், 2.0-வில் நீங்கள் வளரும் குழந்தைகளுக்கு மட்டுமல்ல வளர்ந்த குழந்தைகளுக்கும் உங்களது மாய பிரம்மாண்டத்தின் மூலம் நன்னெறியைப் பரந்துபட்டு போதித்துள்ளீர்கள்.

மெகா ஸ்டார் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், லைகா தயாரிப்பாளர் என உங்களது கரு மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி.  உங்களது 25 ஆண்டு கால நேர்த்தியான கடின உழைப்புக்கும் அதன் மீதான உங்களது பேரார்வத்துக்கும் அதை நீங்கள் நீடித்த வெற்றியாக்கியதற்குமான சாட்சிதான் இந்த நம்பிக்கையும் அதற்காக ஒதுக்கப்பட்ட பெரும் பட்ஜெட்டும்.

இது ஒரு சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம். அதன் டேக்லைன் 'இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல..' என்பதே. இதற்கு, மனிதர்களுடன் ரோபோக்களும் இருக்கும் என்று அர்த்தமல்ல. மீண்டும் ஒருமுறை படத்தைப் பாருங்கள். அன்றும் இன்றும் தான் யார் என்பதை நிரூபித்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர் சார். அவ்வளவுதான்''. 

இவ்வாறு அறிவழகன் தெரிவித்துள்ளார்.

அறிவழகன் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக 'பாய்ஸ்' மற்றும் 'அந்நியன்' போன்ற திரைபடங்களில் பணியாற்றினார். இவர் இயக்கிய முதல் திரைப்படமான 'ஈரம்' திரைப்படத்திற்கு ஷங்கர் தன்னுடைய எஸ் பிக்சர்ஸ் சார்பாக தயாரிக்க பெரும் வெற்றி பெற்றது. இவரின் 'ஈரம்' திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கிய திகில் திரைப்படமாகப் பதிவானது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT