தமிழ் சினிமா

மரண மாஸ் பாடல் குறித்து கங்கை அமரன் ட்வீட்டால் சர்ச்சை

ஸ்கிரீனன்

'பேட்ட' படத்திலிருந்து வெளியிடப்பட்ட 'மரண மாஸ்' பாடல் குறித்து, ட்விட்டர் தளத்தில் கங்கை அமரனின் பதிவால் சர்ச்சை உருவாகியுள்ளது.

'2.0' படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் 'பேட்ட'. இப்படத்தின் பாடல்கள் டிசம்பர் 9-ம் தேதி வெளியாகவுள்ளது. மேலும், இதில் 'மரணமாஸ்' என்ற தலைப்பில் உருவாகியுள்ள பாடலை டிசம்பர் 3-ம் தேதி வெளியிட்டது படக்குழு.

அனிருத் மற்றும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இணைந்து பாடியுள்ள இப்பாடலை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்திய அளவில் முதல் இடத்தில் ட்ரெண்ட்டிங்காகி வருகிறது. நீண்ட நாட்கள் கழித்து ரஜினி படத்தில் ஒரு முழுமையான குத்துப்பாடலாக அமைந்திருப்பதாக அவரது ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், இப்பாடல் குறித்து பாடலாசிரியர், இயக்குநர் மற்றும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் தனது ட்விட்டர் பக்கத்தில் மீம்ஸ் ஒன்றை பகிர்ந்தார். அதில் 'சர்கார்' படத்தில் விஜய் ஓட்டு போட பூத்துக்குள் செல்வார். பிறகு ஓட்டில்லை என்றவுடன் திரும்பிவிடுவார். அக்காட்சியைக் கொண்டு உருவாக்கப்பட்ட மீம்ஸில் விஜய் வாக்களிக்க போகும் காட்சிக்கு ”ரஜினிக்கு ஒப்பனிங் பாடல் பாட வந்தேன்” என்றும்,  விஜய் திரும்பும் போது “அவர் பாட வந்ததை அனிருத்தே பாடிட்டார் பா” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மீம்மை கங்கை அமரன் ஷேர் செய்ததால், ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இது தொடர்பாக “அந்த பாடலில் திரு. ரஜினி பாடும் பகுதிய மட்டும் தான் திரு. SPB அவர்கள் பாடியிருக்கிறார். மற்ற பகுதிகள் ரஜினி அவர்களை புகழ்வது போலுள்ளது. அவரை அவரே எப்படி புகழ்ந்து பாட முடியும். பாடலை முழுவதுமாக கேட்டுவிட்டு பொறுப்புடன் Memes போடுங்கள். வயது ஆகிவிட்டது அல்லவா” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக “என் பேரு படையப்பா... இளவட்ட நடையப்பா... பாசமுள்ள மனுஷனப்பா நான்.  மீசவச்ச குழந்தையப்பா என்றும் நல்லதம்பி நானப்பா  நன்றியுள்ள ஆளப்பா... தாலாட்டி வள்ர்த்தது தமிழ்நாட்டு மண்ணப்பா” என்று தெரிவித்துள்ளார் கங்கை அமரன். அதாவது முழுக்க ரஜினியை புகழ்ந்திருக்கும் இப்பாடல் எஸ்.பி.பி பாடியது தான் என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும், “பொறுப்பு இருந்தா ஏன் மீம்ஸ் போட போகிறார் நண்பா.” என்று ஒருவர் கிண்டல் செய்தார். அவருக்கு பதிலளிக்கும் விதமாக “என் நண்பர் ரஜனிக்கு என் இன்னொரு நண்பர் மீண்டும் பாடபோகிறார் என்ற ஆவலுடன் தான் பாடலைக்கேட்டேன் சூப்பர் மிக அமர்க்களமாக இருந்தது. ஆனால் இதே முழுப்பாடலையும் எஸ்பிபி பாடியிருந்தால் இன்னும் சொல்லமுடியாத அளவுக்கு உயர்ந்திருக்கும். அனிருத் தவறாக பாடவில்லை. நன்றாக இருக்கிறது. ஆனால்?” என்று ட்வீட் செய்துள்ளார் கங்கை அமரன்.

கங்கை அமரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மீமாலும், கூறியுள்ள கருத்தாலும் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

SCROLL FOR NEXT