தனுஷ் நடிப்பில் வருகிற வெள்ளிக்கிழமை (டிசம்பர் 21) ரிலீஸாக இருக்கும் படம் ‘மாரி 2’. பாலாஜி மோகன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், சாய் பல்லவி ஹீரோயினாக நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா, டொவினோ தாமஸ், ரோபோ சங்கர், வினோத் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘மாரி 2’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று (டிசம்பர் 18) நடைபெற்றது. அதில் பேசிய தனுஷ், “ எனக்கு ‘மாரி’ மாதிரி ஒரு கதாபாத்திரத்தைக் கொடுத்ததுக்கு நன்றி பாலாஜி மோகன். என் வாழ்க்கையிலேயே ‘மாரி’யா இருக்கும்போதுதான் நான் ரொம்ப மகிழ்ச்சியா இருப்பேன். நிஜ வாழ்க்கையில நம்மை நிறைய பேர் சீண்டிக்கிட்டே இருப்பாங்க. நம்மால எதுவும் பண்ண முடியாது. பல்லைக் கடிச்சிக்கிட்டுப் போயாவணும்.
ஆனால், ‘மாரி’யா இருக்கும்போது, கூப்பிட்டு நாலு தட்டு தட்டலாம். ‘நம்மை யாரு நிஜ வாழ்க்கையில கடுப்பேத்துனா’னு யோசிச்சு, அந்த ஆளைக் கூப்பிட்டு நாலு தட்டு தட்டணும். அதுக்குத்தான் ‘அடிதாங்கி’னு நமக்கு வினோத் இருக்காரு.
என்னைக்கெல்லாம் வினோத்தை அடிக்கிற ஸீன் இருக்கோ, அப்போதெல்லாம் யாரு நம்மைக் கடுப்பேத்துனானு யோசிச்சு, ஆந்த ஆளை மனசுல வச்சுக்கிட்டு இவரை அடிப்பேன். சில சமயம் நிஜமாகவே அடி விழுந்துடும்.
எனவே, ‘மாரி’யா இருந்தா செம ஜாலியா இருக்கலாம். எல்லா கஷ்டங்களையும் வெளில எடுத்துடலாம். அவனுக்கு ரூல்ஸே கிடையாது, அவன் எப்படி வேணும்னாலும் இருக்கலாம். ஸ்டேஜ்னா இப்படித்தான் பேசணும், பிரஸ்மீட்னா ஒருத்தரை ஒருத்தர் புகழ்ந்து பேசணும்னு ரூல்ஸ்லாம் இருக்குல்ல. அதெல்லாம் அவனுக்குக் கிடையாது. என்ன வேணும்னாலும் பேசலாம். ப்ரிவியூ படம் பார்த்துட்டு வெளில வந்து, ‘படம் நல்லா இல்ல’னு சொல்லலாம்.
இந்த பிரஸ்மீட்டுக்குக் கூட நான் ‘மாரி’ கெட்டப்ல தான் வரலாம்னு நினைச்சேன். ‘மாரி’யா வந்துருக்கேன்னு சொல்லி, மனசுல உள்ளதை எல்லாம் பேசிடலாம்னு நிஜமாகவே யோசிச்சேன். சும்மாவே கான்ட்ரவர்ஸிக்கு ஸ்பெல்லிங் தனுஷ் தான்னு சொல்றாங்க. எதுக்கு வெறும் வாய்க்கு அவல் கொடுப்பானேனு கடைசி நிமிஷத்துல அந்த ஐடியாவை கேன்சல் பண்ணிட்டேன்.
இந்தப் படம் வெற்றிப் படமாக இருக்கும் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கு. அது, ‘மாரி’ மூன்றாம் பாகத்தைத் தீர்மானிக்கும்” என்றார்.