'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம்தான் எனக்கு இவ்வளவு புகழ் கிடைத்தது என்று ஓவியா அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குப் பிறகு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியவர் ஓவியா. ஆனால், அதற்குப் பிறகு ஒப்பந்தமான படங்கள் அனைத்துமே தாமதமாகி வருகின்றன. 'காஞ்சனா 4', 'களவாணி 2', '90 ML' ஆகிய படங்கள் தயாரிப்பில் இருக்கின்றன.
இந்நிலையில், 'பிக் பாஸ்' நிகழ்ச்சி குறித்தும், தனது வளர்ச்சி குறித்தும் ஓவியா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
பலர் ஒரே இரவில் பெரிய பிரபலமாக மாறிவிட்டதாக நினைக்கிறார்கள். அது ஓரளவு உண்மைதான். 'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம்தான் எனக்கு இவ்வளவு புகழ் கிடைத்தது. ஆனாலும் பெரிய கஷ்டங்கள், சிரமங்களுக்குப் பிறகே இந்த இடத்துக்கு வந்துள்ளேன்.
பல ஆண்டுகளுக்கு முன்பே சினிமாவுக்கு வந்துவிட்டாலும், இப்போதுள்ள அளவுக்குப் புகழ் புகழ் கிடைக்கவில்லை. ஆனால், போராடிக்கொண்டே இருந்தேன். 'பிக் பாஸ்' முடிந்து ஓராண்டு ஆகியும் மக்கள் என்னை மறக்காமல் நேசிக்கிறார்கள். இது ஆச்சர்யமாக இருக்கிறது.
என்னை பலரும் அவர்களது குடும்பத்தில் ஒருவராகத்தான் பார்க்கிறார்கள். சிலர் என்னுடைய ரசிகர்களைத் தவறாகப் பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபடுத்தி சம்பாதிக்கிறார்கள். நான் சின்ன கதாபாத்திரங்களில் நடித்த படங்களுக்குக் கூட என் பெயரைச் சொல்லி விளம்பரம் தேடுகிறார்கள். வியாபாரப் பொருட்களிலும் என் பெயரைப் பயன்படுத்துகிறார்கள். இது வருத்தமாக இருக்கிறது.
இவ்வாறு ஓவியா தெரிவித்துள்ளார்.