'2.0' வெளியான 6 நாட்களில் சென்னையில் மட்டும் சுமார் 13 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
லைகா நிறுவனம் தயாரிப்பில் ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் '2.0'. ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்துக்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார்.
தமிழை விட இதர மொழிகளில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் சென்னையில் '2.0' தொடர்ச்சியாக நல்ல வசூல் செய்து வருகிறது. இங்கு, பல திரையரங்குகளில் 3டி தொழில்நுட்பத்திலேயே திரையிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
படம் வெளியான நவம்பர் 29-ம் தேதி வசூலை விட, டிசம்பர் 2 (ஞாயிற்றுக்கிழமை) வசூல் அதிகமாக இருந்தது. முதல் 4 நாட்களில் ரூ.2.64 கோடி, ரூ.2.13 கோடி, ரூ.2.57 கோடி, ரூ.2.75 கோடி என மொத்தமாக ரூ.10.09 கோடி வசூல் செய்தது.
அதனைத் தொடர்ந்து ரூ.1 கோடிக்கு அதிகமாகவே வசூல் செய்து வருகிறது. தற்போது வெளியான 6 நாட்களில் சென்னையில் மட்டும் ரூ.13 கோடியைக் கடந்துள்ளது. இதனால் '2.0' முழு ஓட்டத்தில் 'பாகுபலி 2' படத்தின் சென்னை வசூலை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் 'பாகுபலி 2' திரைப்படம் ரூ.18.8 கோடி வசூல் செய்தது சாதனையாகக் கருதப்படுகிறது. இப்போதுள்ள சூழல்படி வரும் வார இறுதிநாட்களில் இந்தச் சாதனையை '2.0' முறியடிக்கும் என்று திரையரங்க உரிமையாளர்கள் கருதுகிறார்கள்.
தமிழகத்தில் பி மற்றும் சி சென்டர்கள் எனப்படும் சென்னையைத் தாண்டிய ஊர்களில் வசூல் குறைந்த அளவிலேயே உள்ளது.