கஜா புயல் நிவாரண நிதியாக அஜித் 5 கோடி ரூபாய் கொடுத்தார் என்று சேலம் விநியோகஸ்தர் 7ஜி சிவா கூறியுள்ளார்.
தமிழகத்தை மிரட்டிவந்த கஜா புயல் கடந்த 16-ம் தேதி நாகை வேதாரண்யம் இடையே கரையைக் கடந்தது. இதில் நாகை, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. மேலும் 7 மாவட்டங்களும் பாதிப்புக்குள்ளாகின. கஜா புயல் தாக்கியதால் டெல்டா மாவட்டங்களில் வரலாறு காணாத பேரழிவு உண்டானது.
இம்மாவட்டங்களை மீட்டெடுக்க பல்வேறு தரப்பிலிருந்து நிவாரண நிதிகள் குவிந்து வருகின்றன. மேலும், தமிழக அரசும் இந்த மாவட்டங்களில் மின்சாரத்தை சீர் செய்ய நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பல்வேறு திரையுலகினரும் தங்களுடைய ரசிகர் மன்றங்கள் மூலமாகவும், தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு நிதியளித்தும் வருகிறார்கள். இதில் நடிகர் அஜித் தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு 15 லட்சம் வழங்கினார். இது குறித்து எந்தவொரு தகவலையுமேஎ அவரது தரப்பில் அளிக்கவில்லை.
தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், அஜித் 15 லட்சம் என்று இருந்தது. தான் கொடுத்த நிவாரண நிதியைக் கொடுக்க வெளியே சொல்லவில்லையே என்று பலரும் சமூக வலைதளத்தில் அஜித்தைப் பாராட்டி வந்தனர்.
இந்நிலையில், 2019 பொங்கலுக்கு அஜித் நடிப்பில் 'விஸ்வாசம்' வெளியாகவுள்ளது. இதனை எப்படியெல்லாம் கொண்டாடலாம் என்பதற்கான ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் நேற்று (டிசம்பர் 2) நடைபெற்றது. இதில் விநியோகஸ்தர் 7ஜி சிவா கலந்து கொண்டார். சேலத்தில் அஜித் படங்கள் அனைத்தையுமே மிகப் பிரம்மாண்டமாக வெளியிடுபவர் 7ஜி சிவா என்பது குறிப்பிட்டத்தக்கது. மேலும், தற்போது வெளியாகியுள்ள '2.0' படத்தின் சேலம் உரிமையை வாங்கி வெளியிட்டது இவர் தான்.
இவர் அஜித்தின் தீவிர ரசிகர். ‘வீரம்’ படத்தை தெலுங்கில் பவன் கல்யாண் 'கட்டமராயுடு' என்ற பெயரில் ரீமேக் செய்தார். அதன் தமிழக உரிமையை வாங்கி வெளியிட்டவர் 7ஜி சிவா.
நேற்றைய (டிசம்பர் 2) ஆலோசனைக் கூட்டத்தில் 7ஜி சிவாபேசும் போது “அஜித் சார் கஜா புயல் நிவாரண நிதியாக 15 லட்சம் கொடுத்தார் என்று அனைவருமே சொல்வார்கள். ஆனால், அஜித் சார் 5 கோடி ரூபாய் கொடுத்துள்ளார். தான் செய்த உதவிகளை வெளியே சொல்லாமல் இருப்பதுதான் அவருடைய கேரக்டர். அவருடன் பெர்சனலாகப் பேசியிருக்கிறேன், பழகியிருக்கிறேன் என்பதால் எனக்குத் தெரியும். அஜித் சார் எதையுமே விளம்பரப்படுத்திக் கொள்ளமாட்டார்” என்று பேசியுள்ளார் 7ஜி சிவா.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும், பலரும் கஜா புயலுக்கு அஜித் ரூ.5 கோடி கொடுத்தது உண்மையா என்ற விசாரணையிலும் இறங்கியுள்ளனர்.
’விஸ்வாசம்’ படத்தின் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது வினோத் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் அஜித்.