மீ டூ இயக்கத்தின் மூலம் கோலிவுட்டில் முதன்முதலில் புகார் கூறியவர் பாடகி சின்மயி. கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய சின்மயி இன்றளவும் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், அண்மையில் நடிகை செளகார் ஜானகி பேட்டி ஒன்றில் மீ டூ குறித்து சரமாரியாக வசைபாடினார். அவரைப் பேட்டிகண்ட ஒய்ஜி மகேந்திரனும் எல்லாவற்றையும் ஆமோதிப்பதுபோல் பேசினார். அவர்கள் உரையாடல் மறைமுகமாக சின்மயியைச் சாடுவதாகவே இருந்தது.
இந்நிலையில் இது குறித்து சின்மயியின் கணவர் ராகுல் தனது வலைப்பக்கத்தில் நீண்ட விளக்கம் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அதில், "இளம் பெண்களே, செளகார் ஜானகி, ஒய்.ஜி.மகேந்திரன் போன்றவர்களுக்கு அவர்களின் திறமைக்கு மரியாதை கொடுங்கள். ஆனால், மீ டூ இயக்கம் பற்றி அவர்கள் கருத்தை ஏற்றுக்கொண்டுவிடாதீர்கள். இப்படிப்பட்டவர்கள் தங்கள் கருத்தை இளம் வயதினர் மீது திணித்துவிடுவார்கள். இதனால், உங்களது சுய சிந்தனை பாதிப்படையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஒரு ஆணோ அல்லது பெண்ணோ உங்களிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டால் முதலில் அது உங்கள் தவறு ஏதும் இல்லை என்பதை நம்புங்கள். அதில் நீங்கள் வெட்கப்படுவதற்கு ஏதுமில்லை. அது உங்களுக்குள் சலனத்தை ஏற்படுத்தலாம். உங்களை சங்கடப்படுத்தி மவுனமாக்கலாம். உள்ளம் கொண்ட காயம் ஆற நேரம் கொடுங்கள். அதன் பின்னர் உங்களுக்கு நேர்ந்ததை வெளியே சொல்ல தைரியம் துணிச்சல் ஏற்படுத்தி அதைப் பற்றிப் பேசுங்கள். ஒருவேளை பல ஆண்டுகளுக்குப் பின்னர்தான் அதைப் பற்றி வெளியே பேசும் துணிச்சல் உங்களுக்கு வரலாம். ஆனால் அதைப் பற்றிச் சொல்லுங்கள். இல்லாவிட்டால் உங்களுக்கு நேர்ந்தது நாளை வேறு ஒரு பெண்ணுக்கு ஏற்படக்கூடும்.
எனவே இதுபோன்ற சமூக அந்தஸ்து பெற்ற நபர்கள், இத்தகைய சம்பவங்களை வெளியே சொன்னால் உங்கள் கவுரவம், குடும்ப கவுரவம் பாதிக்கப்படும் என்று சொல்வதைக்கேட்டு நம்பிவிடாதீர்கள். உங்களுக்கு நேர்ந்ததை வெளியே சொல்வதால் நீங்களோ, உங்கள் குடும்பமோ, உங்கள் கணவரோ, காதலரோ நிச்சயம் அசிங்கப்படப் போவதில்லை. குற்றம் செய்த கிரிமினல்கள்தான் வெட்கப்பட வேண்டுமே தவிர பாதிக்கப்பட்டவர்கள் வெட்கப்படத் தேவையில்லை.
குற்றவாளிகள் மரியாதைக்குப் பங்கம் ஏற்படுவதை நினைத்து ஏன் இவர்கள் வருந்துகிறார்கள் என்று கேளுங்கள். இத்துடன் அவர்கள் நிற்க மாட்டார்கள். ஆதாரம் கேட்பார்கள். ஒரு ஆண் உங்களைத் துன்புறுத்தும்போது நீங்கள் அச்சத்தில் உறைந்திருப்பீர்களே தவிர கேமராவை எடுத்து ஃபோட்டோ பிடிக்கும் மனநிலையில் இருக்கமாட்டீர்கள் என்று அவர்களிடம் சொல்லுங்கள்.
கீழ்த்தரமான விளம்பரத்துக்காக செய்கிறீர்கள் என்று சொன்னால்.. வெளிப்படையாக துணிச்சலாக இதை வெளியே சொல்வதன் மூலம் உங்களை வசைபாடுபவர்களே சமூகத்தில் அதிகமாக இருக்கும்போது இப்படியொரு விளம்பரத்தை யாரும் விரும்பமாட்டார்கள் என்று சொல்லுங்கள்.
முன்னொரு காலத்தில் பெண்கள் வாக்களிக்க முடியாது. பெண்கள் கல்வி கற்க முடியாது. பெண்கள் வேலைக்குச் செல்வதும் கேவலமாகவே பார்க்கப்பட்டது. ஆனால், இன்று ஏளனம் செய்த பெரியவர்களுக்கு பாடம் கற்பித்துவிட்டு, பெண்கள் முன்னேறிவிட்டனர்.
அதுபோலவே, இன்று சில பெரியவர்கள் மீ டூவை கேவலமாகப் பேசலாம். அதில் புகார் சொல்லும் பெண்களையும் கேவலப்படுத்தலாம். ஆனால், ஒரு நாள் இந்த உலகத்தைப் பற்றியோ பணியிடத்தைப் பற்றியோ சற்றும் கவலைப்படாமல் உங்களால் உங்களை துன்பப்படுத்தியவர் பற்றி வெளியே சொல்ல இயலும் காலம் வரும்.
சின்மயி போன்ற துணிச்சலான பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதில் நான் பெருமைப்படுகிறேன். அவர் அவருக்கு நேர்ந்த துன்பத்தை வெளியே சொன்னதால் அவரும் அவமானப்படத் தேவையில்லை. எனக்கும் எந்த அவமானமும் இல்லை''.
இவ்வாறு ராகுல் பதிவிட்டிருக்கிறார்.