வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜெயில்' படத்தின் பாடல் ஒன்றுக்கு அதிதி ராவை பாடகியாக அறிமுகப்படுத்தியுள்ளார் ஜி.வி.பிரகாஷ்
வசந்தபாலன் இயக்கிய 'வெயில்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். தற்போது நாயகனாக வசந்தபாலன் இயக்கத்தில் நடித்துள்ளார்.
'ஜெயில்' என்ற பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தி முடித்துள்ளனர். தற்போது இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் ஒரு பாடலுக்காக அதிதி ராவை பாட வைத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'காற்று வெளியிடை' மற்றும் 'செக்கச்சிவந்த வானம்' படத்தில் நடித்தவர் அதிதி ராவ். மேலும், சில தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கூட தனது குரல் திறமையை வெளிப்படுத்தினார்.
அதிதி ராவின் திறமையைப் பார்த்து 'ஜெயில்' படத்துக்காக பாடும் வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். 'காத்தோடு' என்ற டூயட் பாடலை ஜிவி.பிரகாஷோடு பாடியிருக்கிறார் அதிதி ராவ்.
இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். அவரோடு ராதிகா, ‘பசங்க’ பாண்டி, ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ அபர்ணதி, ஜெனிஃபர், மணிமேகலை, 'பாகுபலி' வில்லன் பிரபாகர் உள்ளிட்ட பலர் ஜி.வி.பிரகாஷுடன் நடித்திருக்கிறார்கள். நாயகனாக நடித்ததோடு மட்டுமன்றி இசையமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.
இப்படத்துக்குக் கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜி.ராமகிருஷ்ணனும், பாக்கியம் சங்கரும் வசனம் எழுதியுள்ளனர்.