தமிழ் சினிமா

‘டூலெட்’ படத்துக்கு மற்றுமொரு விருது

செய்திப்பிரிவு

ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கிய ‘டூலெட்’ திரைப்படம், ஹைதராபாத்தில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான விருதைப் பெற்றுள்ளது.

‘தென்மேற்குப் பருவக்காற்று’, ‘தாரை தப்பட்டை’, ‘பரதேசி’, ‘ஜோக்கர்’ உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் செழியன். இவர் முதன்முதலாக இயக்கியுள்ள படம் ‘டூ லெட்’.

ஒரு இளம் தம்பதி, அவர்களது மகன் ஆகியோரை இந்த ‘டூலெட்’ என்கிற வார்த்தை எப்படி அல்லாட வைக்கிறது என்பதுதான் படத்தின் கதை. இந்தப் படத்தில் நாயகன் - நாயகி என்றெல்லாம் கிடையாது. செழியனின் உதவியாளர் சந்தோஷும், நாட்டியக் கலைஞரான ஷீலாவும், தருண் என்ற சிறுவனும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

பத்திரிகையாளர் அருள் எழிலன், கவிஞர் ரவி சுப்ரமணியன், முனைவர் மருது மோகன், நாடகக் கலைஞர் ஆதிரா, எழுத்தாளர் எம்.கே.மணி ஆகியோர் நடிப்பில் இந்தப் படத்துக்குப் பங்களிப்பு செய்திருக்கிறார்கள்.

2017-ம் ஆண்டு கொல்கத்தா திரைப்பட விழாவில், சிறந்த இந்தியப் படத்துக்கான விருது இந்தப் படத்துக்கு கிடைத்தது. அத்துடன், இந்த ஆண்டு (2018) சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருதையும் வென்றுள்ளது.

இந்நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்ற ‘ஆல் லைட்ஸ் இண்டியா இண்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலில்’ 2018-ம் ஆண்டின் சிறந்த இந்தியப் படத்துக்கான விருதைப் பெற்றுள்ளது. கடந்த 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை நடைபெற்ற இந்த விழாவில், உலகம் முழுவதும் இருந்து பல்வேறு படங்கள் திரையிடப்பட்டன.

SCROLL FOR NEXT