தமிழ் சினிமா

இளையராஜா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தயாரிப்பாளர்கள்

செய்திப்பிரிவு

பாடல்கள் மூலம் கிடைக்கும் ராயல்டி, தயாரிப்பாளர்களுக்குத் தராமல் ஏமாற்றப்படுவதாக இசையமைப்பாளர் இளையராஜா மீது சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பி.டி.செல்வகுமார் தலைமையில் அன்புச்செல்வன், ஜெபஜோன்ஸ், மீரா கதிரவன், மணிகண்டன், சந்திரசேகர் ஆகிய தயாரிப்பாளர்கள், சென்னை உயர்நீதி மன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். கச்சேரி, காலர் ட்யூன், பாடல் ஒலிபரப்புகள் மூலம்  வரும் வருவாயில், தயாரிப்பாளர்களுக்கு உரிய பங்கு வரவேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பி.டி.செல்வகுமார் கூறியதாவது:

தன்னுடைய இசையமைப்பில் வெளியான அனைத்துப் பாடல்களின் உரிமையும், அந்தப் பாடல்கள் மூலம் கிடைக்கும் வருவாயும் தனக்கே கிடைக்க வேண்டும் என உரிமை கோரி வருகிறார் இளையராஜா. ஆரம்ப காலங்களில் இளையராஜாவை இசையமைப்பாளராகக் கொண்டு பஞ்சு அருணாச்சலம், கே.ஆர்.ஜி., பாலசந்தர், எஸ்.ஏ.சந்திரசேகர், பாரதிராஜா, ஆனந்தி ஃபிலிம்ஸ், தேவர்ஸ் ஃபிலிம்ஸ் ஆகியோர் படங்கள் எடுத்துள்ளனர்.

இளையராஜாவின் பாடல்கள் வெற்றிபெற்ற போதிலும், அதன்மூலம் கிடைக்கும் வருவாய் அந்தத் தயாரிப்பாளர்களுக்குக் கிடைக்காமல் ஏமாற்றப்பட்டு வருவது துரதிர்ஷ்டம். இளையராஜாவின் இசைக்கு முதலீடு செய்த பல தயாரிப்பாளர்கள், மிகவும் கஷ்டமான சூழலில் வாழ்ந்து வருகின்றனர்.

இளையராஜா பரிந்துரைப்படி பல தயாரிப்பாளர்கள் தங்களது ஆடியோ உரிமையை எக்கோ நிறுவனத்துக்கு வழங்கியுள்ளனர். அதில் வரும் 50% சதவீத ராயல்டி, இதுவரை எந்தத் தயாரிப்பாளருக்கும் முறையாக வந்ததில்லை. இனிவரும் காலங்களில், பாடல்கள் மூலம் வருவாயாக 25 லட்ச ரூபாய் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருவாய், தயாரிப்பாளர்களுக்கும் வரவேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

பாடல்களின் உரிமை தயாரிப்பாளர்களையே சாருமே தவிர, சம்பளம் வாங்கிக் கொண்டு இசையமைத்த இளையராஜாவுக்கு எக்காரணத்தைக் கொண்டும் சாராது எனத் தயாரிப்பாளர்கள் கருதுகின்றனர். இதுவரை சுமார் 200 கோடி ரூபாய்க்கு மேல் தயாரிப்பாளர்களுக்கு வரவேண்டிய பங்குப் பணம் ஏமாற்றப்பட்டிருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT