‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தில் நடிக்க தூது விட்டிருப்பதால், விரைவில் அப்படத்தின் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி கிடைக்கும் எனத் தெரிகிறது.
ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’. சென்னைக்கு அருகே பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே, படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வடிவேலு படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை.
இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தது படக்குழு. ஆனால், பலமுறை தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியும், வடிவேலு தரப்பிலிருந்து எந்த ஒரு பதிலுமே இல்லை. நீண்ட காலமாக இப்பிரச்சினை குறித்து விவாதித்து வந்தது தயாரிப்பாளர் சங்கம்.
இறுதியாக இயக்குநர்கள் சங்கம், பெப்சி, நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் ஆகியோர் ஒன்றிணைந்து கூட்டம் ஒன்றை நடத்தினார்கள். அதில் ‘வடிவேலு எந்தவித நிபந்தனையுமின்றி படப்பிடிப்பில் கலந்து கொண்டு முடித்துக்கொடுக்க வேண்டும் அல்லது இதுவரை செலவழிக்கப்பட்ட தொகை மற்றும் சம்பளத் தொகை அனைத்தும் சேர்த்து வட்டியுடன் அளிக்க வேண்டும்’ என்று முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவால் வடிவேலு தரப்பினர் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த முடிவு குறித்து தயாரிப்பாளர் சங்கத்துக்குக் கடிதம் அனுப்பினார் வடிவேலு. ஆனால், தொடர்ச்சியாக காலம் தாழ்த்தி வந்ததால் 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படத்தின் பிரச்சினை முடியும் வரை, வேறு எந்தவொரு படத்தில் வடிவேலுவை ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியது தயாரிப்பாளர் சங்கம்.
இதனால் வடிவேலு நடிப்பதாக ஒப்புக் கொண்ட ஞானராஜசேகரன் இயக்கத்தில் உருவாகும் படம், சுராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் ஆகியவை சிக்கலானது. மேலும், வடிவேலுவை ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர்கள் அனைவருமே முதலில் 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' பிரச்சினையை முடியுங்களேன் என்று கூறத் தொடங்கினார்கள்.
தனது மகளின் திருமண வேலைகள் இருந்ததால், இப்பிரச்சினையில் கவனம் செலுத்தாமல் இருந்தார் வடிவேலு. தற்போது மகளின் திருமணம் முடிந்ததால் 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' பிரச்சினையை எப்படியாவது முடிக்கலாம் என பல வழிகளில் முயற்சி செய்தார். ஆனால், எதிலுமே இதை முடிக்க முடியவில்லை.
தற்போது, 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படத்தில் நடிக்கிறேன் என்று படக்குழுவினருக்கு தனது ஆட்கள் மூலமாக தூது அனுப்பியுள்ளார். இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் விரைவில் கூட்டம் நடைபெறவுள்ளது. அப்போது வடிவேலு, இயக்குநர் சிம்புதேவன், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட அனைவருமே உட்கார்ந்து பேசி நல்லமுடிவை எட்டுவார்கள் எனத் தெரிகிறது. இதனால், 2019-ம் ஆண்டில் படப்பிடிப்பு தொடங்கப்படுவது உறுதியாகியுள்ளது.