பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த பெண் சிட்டு. அந்த ஊரைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காக வரும் ஜெய் சூர்யாவுக்கும் சிட்டுவுக்கும் சூழ்நிலை காரணமாகக் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்படுகிறது.
ஜெய் சூர்யாவோ, வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயம் ஆனவன். அவன் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்காத கிராமத்தினர், கட்டாயமாகத் திருமணம் செய்துவைத்து, சிட்டுவை அவனுடன் நகரத்துக்கு அனுப்பி வைக்கின்றனர்.
சிட்டுவுக்கும் தனக்கும் திருமணம் ஆனதைக் குடும்பத்தினரிடம் இருந்து மறைத்து விடுகிறார் ஜெய் சூர்யா. அவன் வீட்டில் வேலைக்காரியாகத் தங்கிவிடுகிறாள் சிட்டு.
தன்னுடைய திருமணத்தை வீட்டில் தெரிவிப்பாரா ஜெய் சூர்யா? சிட்டுவின் காதல் வெல்லுமா? நிச்சயமான திருமணம் என்னாகும்? என்பதுதான் ‘நீலக்குயில்’ சீரியலின் கதை. விஜய் தொலைக்காட்சியில் இன்று (டிசம்பர் 13) முதல் இந்த சீரியல் ஒளிபரப்பைத் தொடங்கியுள்ளது. திங்கள் முதல் சனி வரை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
ஜெய் சூர்யாவாக சத்யாவும், மலையாள தொலைக்காட்சியில் பிரபலமான ஸ்நிஷா சிட்டுவாகவும், தெலுங்கு தொலைக்காட்சியில் பிரபலமான சந்தனா ராணியாகவும் நடிக்கின்றனர். ஜெயக்குமார் இயக்கிவரும் இந்த சீரியல், காதல், பாசம், சென்டிமென்ட் எனப் பலவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.