தமிழ் சினிமா

மரணமாஸ் பாடல் குறித்த மீம்ஸ் பகிர்வு: சர்ச்சையானதால் சாந்தனு விளக்கம்

ஸ்கிரீனன்

பேட்ட படத்தின் மரண மாஸ் பாடலை கலாய்த்து உருவாக்கப்பட்ட ட்ரோல் வீடியோவைப் பகிர்ந்த சாந்தனு, "நான் அனிருத்தை கலாய்க்கவில்லை. இது சும்மா விளையாட்டுக்கே.." என்று  நடிகர் சாந்தனு ட்விட் செய்திருக்கிறார்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியிருக்கும் படம் ’பேட்ட’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (டிசம்பர் 9) சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பலரும் இப்படத்தின் 'மரணமாஸ்' பாடலைக் கொண்டாடி வருகிறார்கள். இதனால் இப்பாடல் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

இப்பாடலுக்கு பாக்யராஜின் மகன் சாந்தனு பகிர்ந்த வீடியோ சர்ச்சையில் சிக்கியுள்ளது. இதில் 'மரணமாஸ்' பாடல் சிறிதளவும், அதனைத் தொடர்ந்து  ’அந்த 7 நாட்கள்’ படத்தில் அம்பிகாவைப் பார்த்து பாக்யராஜ் பாடும் 'உனக்கும் எனக்குமே பொருத்தம்' என்று பாடுவதும் இணைந்திருந்தது. இதனைப் பார்த்து தான் அனிருத் காப்பியடித்துள்ளார் என்கிற ரீதியில் இப்பதிவு அமைந்திருந்தது.

இந்த வீடியோ பகிர்வு ரஜினி ரசிகர்கள் மத்தியில் கோபத்தை உண்டாக்கியது. இதனால், பலரும் அவரது ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு சாடத் தொடங்கினார்கள். இதைத் தொடர்ந்து, "மக்களே.. இதை நீங்கள் பேசிப் பேசியே சீரியஸா ஆக்கிடுவீங்க போல@@ அனிருத்தை இதில் டேக் செய்திருக்கிறேன்.

ஏனென்றால் அவர் என் நண்பர். இது வெறும் பகடி என்று அவருக்குத் தெரியும். அனிருத்தின் திறமை வேற லெவல். இது சும்மா விளையாட்டுதான். அப்புறம் இதன் மூலம் நான் அவரை விமர்சிக்கவோ.. கலாய்க்கவோ இல்லை" எனப் பதிவிட்டுள்ளார்.

இதற்காக சாந்தனுவை நெட்டிசன்கள் சிலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT