‘திமிரு புடிச்சவன்’ வெளியீட்டுக்கு தயாரிப்பாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்திருப்பதால், விஜய் ஆண்டனி மனைவி தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக சாடியுள்ளார்.
தீபாவளி தினத்தன்று வெளியாகியுள்ள ‘சர்கார்’ திரைப்படம் நல்ல வசூல் செய்து வருகிறது. அப்படத்தைத் தொடர்ந்து நவம்பர் 16-ம் தேதியனறு ‘காற்றின் மொழி’, ‘செய்’, ‘சித்திரம் பேசுதடி 2’ மற்றும் ‘உத்தரவு மகாராஜா’ ஆகிய படங்கள் வெளியாக தயாரிப்பாளர்கள் சங்கம் அனுமதியளித்தது.
இப்படங்களோடு விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘திமிரு புடிச்சவன்’ படமும் வெளியாகும் என விளம்பரப்படுத்தினார்கள். இதனால், நவம்பர் 16-ம் தேதியன்று வெளியாகவுள்ள இதர படங்களின் தயாரிப்பாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்தார்கள். இந்த விவகாரம் தொடர்பாக ‘திமிரு புடிச்சவன்’ படக்குழுவினருக்கு தயாரிப்பாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
'திமிரு புடிச்சவன்’ வெளியீடு தொடர்பாக விஜய் ஆண்டனியின் மனைவியும் தயாரிப்பாளருமான பாத்திமா விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
தமிழகம் முழுவதும் 800 திரையரங்குகளை ’சர்கார்’ திரைப்படம் திரையிடப்பட்டதால், இடம் கிடைக்கவில்லை. விநியோகஸ்தர்கள் தேதியை தவறவிட்டது அதிர்ச்சியாக இருந்தது. தயாரிப்பாளர்கள் சங்கம் உறுதியளித்தாலும், திரையரங்குகள் முறைப்படுத்துவதில் இல்லாதபோது திரையரங்குகளை எப்படிப் பெறுவது? ஆனால், அவர்கள் தேதி முறைப்படுத்துதலுக்கு வருகிறார்கள்.
இந்தக் கடினமான நேரத்தில் தயாரிப்பாளர்கள் சங்கம் எங்களுக்கு ஆதரவு அளிக்க கேட்டிருக்கிறோம். அவர்கள் எங்களுடன் இருப்பதால், அவர்கள் நிர்வாகிகள் குழு என்பதால், அவர்கள் சொல்வதைக் கேட்கிறோம். அனைத்துப் பெருமைகளும் இறைவனுக்கே.
’சித்தரம் பேசுதடி 2’ திரைப்படம் திரையிடும் தேதியை வாபஸ் பெற்று இருக்கிறது. ஆதலால், கடந்த கூட்டத்தில் பேசப்பட்டது போல் 16-ம் தேதியைப் பெற எங்களுக்குத் தகுதி உண்டு.
இவ்வாறு பாத்திமா விஜய் ஆண்டனி தெரிவித்திருக்கிறார்.