'திமிரு புடிச்சவன்' வெளியீட்டு சர்ச்சை தொடர்பாக விஜய் ஆண்டனி மீது தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது.
தீபாவளி தினத்தன்று ‘சர்கார்’ படத்துடன் வெளியாகும் என்று விளம்பரப்படுத்தப்பட்ட படம் 'திமிரு புடிச்சவன்'. ஆனால், போதிய திரையரங்குகள் கிடைக்காததால் 'திமிரு புடிச்சவன்' தங்களது வெளியீட்டில் பின்வாங்கி நவம்பர் 16-ம் தேதி வெளியிட்டது. இதற்கான முறையான அனுமதி தயாரிப்பாளர் சங்கத்தில் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.
நவம்பர் 16-ம் தேதி 'திமிரு புடிச்சவன்' வெளியீட்டால் ‘காற்றின் மொழி’, ‘செய்’, ‘சித்திரம் பேசுதடி 2’ மற்றும் ‘உத்தரவு மகாராஜா’ ஆகிய படங்களின் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். இதனால் 'செய்' திரைப்படம் தங்களது வெளியீட்டை மாற்றியமைத்துக் கொண்டது.
தயாரிப்பாளர் சங்கம் விடுத்த எச்சரிக்கையை மீறியும் நவம்பர் 16-ம் தேதி 'திமிரு புடிச்சவன்' வெளியானது. இதனால், உதயா மற்றும் ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் கடும் அதிருப்தியடைந்து தங்களது செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்திருக்கிறார்கள். எந்த தேதியில் என்ன படங்கள் வெளியாக வேண்டும் என்பதற்கான தயாரிப்பாளர் சங்கத்தின் குழுவும் எதற்கு என கேள்வி எழுப்பியிருந்தார்கள். இந்த விவகாரம் பெரும் விஸ்வரூபமாக வெடித்தது.
இந்நிலையில், 'அயோக்யா' படப்பிடிப்பில் இருந்ததால் தயாரிப்பாளர் சங்கத்துக்கு வராமல் இருந்தால் தலைவர் விஷால். சில தினங்களுக்கு முன்பு, சங்கத்துக்கு வருகை தந்தார். அவரிடம் இப்பிரச்சினைத் தொடர்பாக பலரும் விவாதத்தில் ஈடுபட்டனர்.
தற்போது 'திமிரு புடிச்சவன்' வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம், விஜய் ஆண்டனி மீது நடவடிக்கை எடுத்துள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தில் அனுமதி பெறாமல் விஜய் ஆண்டனி படங்களில் திரைப்பட தொழிலாளர்கள் பணியாற்ற கூடாது என்று பெப்சிக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.
மேலும், விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சீதக்காதி’ டிசம்பர் 14-ம் தேதி வெளியிட தயாரிப்பாளர் சங்கம் அனுமதியளித்துள்ளது. ஆனால் படக்குழுவினரோ டிசம்பர் 20-ம் வெளியீடு என்று விளம்பரப்படுத்தி வருகிறார்கள். முறையான அனுமதி பெறாமல் தேதிகள் மாற்றி வெளியிட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.