தமிழ் சினிமா

கஜா புயல் நிவாரணம்: தன்னார்வலர்களுக்கு ஜெயம் ரவி வேண்டுகோள்

ஸ்கிரீனன்

கஜா புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களுக்கு ஒட்டுமொத்தமாக நிவாரணப் பொருட்களை அனுப்புவதை விடுத்து குக்கிராமங்களுக்குச் சென்று ஒவ்வொரு தனிநபர் மீதும் தனிப்பட்ட கவனத்தை செலுத்துமாறு நடிகர் ஜெயம் ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த 15-ம் தேதி நாகப்பட்டினம் - வேதாரண்யம் இடையே கரையைக் கடந்த கஜா புயல் டெல்டா மாவட்டங்களை பதம் பார்த்துவிட்டுச் சென்றது. இதனால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை என பல மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டன.

அங்குள்ள மக்களுக்கு உதவி செய்யும் வகையில் நிவாரணப் பொருட்களைப் பல்வேறு தரப்பினரும் வழங்கி வருகிறார்கள். தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களும் தங்களுடைய ரசிகர் மற்றும் நற்பணி மன்றத்தினரை இப்பணிகளில் ஈடுபடுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், ஜெயம் ரவியும் தனது ரசிகர் மன்றத்தினர் மூலம் கஜா புயல் பாதிப்பு ஏற்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகள் செய்து வருகிறார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெயம் ரவி கூறியிருப்பதாவது:

''ஒரு வேண்டுகோள். இதுவரை நிறைய கிராமங்களுக்கு எந்தவித நிவாரணப் பொருட்களும் சென்று சேரவில்லை. பிரதான சாலை வரையில்தான் நிவாரணப் பொருட்கள் சென்று சேர்கின்றன என்றும் உள்பகுதிகளில் வாழ்பவர்கள் கதி இன்னமும் நிலைகுலைந்து கிடப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

இந்தத் தருணத்தில் ஒட்டுமொத்தமாக நிவாரணப் பொருட்களை அனுப்புவதைக் காட்டிலும் பாதிக்கப்பட்ட உள்பகுதிகளில் தனிப்பட்ட கவனம் செலுத்துவதே முக்கியம். எனது கோரிக்கையை ஏற்று சரியான நபர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிய எனது ரசிகர்களுக்கு நன்றி.

இறைவன் உங்களை ஆசிர்வதிக்கட்டும். இன்னும் நிறைய பணிகள் செய்யவேண்டியுள்ளது. அவர்களது வாழ்க்கையை மறுகட்டமைக்க தயவு செய்து உதவுங்கள்''.

இவ்வாறு ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT