ஆணவப் படுகொலைக்கு எதிராகத் தனிச் சட்டம் இயற்ற வேண்டுமென தமிழக அரசிடம் இயக்குநர் பா.இரஞ்சித் கோரிக்கை விடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் கடந்த 4 மாதங்களுக்கு முன் சாதி மறுப்பு திருமணம் செய்த காதல் ஜோடி நந்தீஷ் - சுவாதி இருவரும் மாயமான நிலையில், கர்நாடகாவில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், நந்தீஷ் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். சுவாதி வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்.
இருவரையும் சாதி ஆணவ கொலை செய்திருக்கலாம் என கருதி, போலீஸார் சுவாதியின் அப்பா ஸ்ரீனிவாஸ், பெரியப்பா வெங்கடேஷ் மற்றும் கிருஷ்ணன் ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம், தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப் படுகொலைகளுக்கு எதிராகப் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசுக்கு இயக்குநர் பா.இரஞ்சித் ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.
“தமிழக அரசே, உடனடியாக ஆணவப் படுகொலைக்கு எதிராகத் தனிச் சட்டம் இயற்று” என ட்விட்டரில் தெரிவித்துள்ள பா.இரஞ்சித், அதற்கு # டேக் போட்டு டிரெண்டாகாக உருவாகும் வகையில் செய்துள்ளார்.