தமிழ் சினிமா

சாமானியர்க்குச் செய்த மிகப்பெரிய துரோகம்: ‘கஜா’ பாதிப்பு குறித்து கபிலன் வைரமுத்து

செய்திப்பிரிவு

நவீன இந்தியா சாமானியர்க்குச் செய்த மிகப்பெரிய துரோகம் என ‘கஜா’ புயல் பாதிப்பு குறித்து கபிலன் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைத் தாக்கிய ‘கஜா’ புயலால் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்கள் பெரும் அழிவைச் சந்தித்துள்ளன. பல ஆண்டுகளாக செலவிட்டு வளர்த்த தென்னை மரங்கள், வாழை, கரும்பு உள்ளிட்டவை பெரும் சேதமடைந்துள்ளன. அதிலிருந்து விவசாயிகள் மீள பல ஆண்டுகள் ஆகும். ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும் இறந்துள்ளன.

‘கஜா’ புயலில் இருந்து மீண்டுவர தமிழ்த் திரையுலகினர் பலரும் தங்களால் ஆன உதவிகளைச் செய்து வருகின்றனர். சூர்யா, கார்த்தி, ஜோதிகா உள்ளிட்ட நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் 50 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளனர். தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் இந்த உதவி செய்யப்பட இருக்கிறது. மேலும், நடிகர் விஜய் சேதுபதி 25 லட்ச ரூபாயும், சிவகார்த்திகேயன் 20 லட்ச ரூபாயும் அளித்துள்ளனர்.

தமிழக அரசின் முதற்கட்ட நிவாரண உதவிகள் சரியாக இல்லை, திருப்தி அளிக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் குமுறி வருகின்றனர். இந்நிலையில், நவீன இந்தியா சாமானியர்க்குச் செய்த மிகப்பெரிய துரோகம் என ‘கஜா’ புயல் பாதிப்பு குறித்து கபிலன் வைரமுத்து ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

“உள்ளாட்சி அமைப்புகளை எந்த விதத்திலும் பலப்படுத்தாமல், எல்லா அதிகாரத்தையும் ஓரிடத்தில் குவித்து, எல்லா துயரங்களின்போதும் பொதுமக்களைக் கையேந்தும் நிலைக்குத் தள்ளியிருப்பதுதான் நவீன இந்தியா சாமானியர்க்குச் செய்த மிகப்பெரிய துரோகம். அடுத்த தலைமுறை இதை மாற்றி அமைக்கும். #SaveDelta” எனத் தெரிவித்துள்ளார் கபிலன் வைரமுத்து.

SCROLL FOR NEXT