‘கஜா’ புயலால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, நாம் நினைத்துப் பார்ப்பதைவிட மிக அதிகமாக இருக்கிறது என உருக்கமாக ட்வீட் செய்திருக்கிறார் நடிகர் கார்த்தி.
இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “கஜாவின் கோர தாண்டவம் பற்றி ஒவ்வொரு நாளும் நமக்குத் தெரியவருகிறது. ‘கஜா’ ஏற்படுத்திய பேரழிவு தெரிகிறது. அங்கு நிலவும் சோகத்தின் தாக்கம் நாம் நினைத்துப் பார்ப்பதைவிட அதிகம். அரசாங்கம் இதனை எல்-3 பேரிடராக அறிவித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த ட்வீட்டுடன் ஒரு வீடியோவையும் அவர் பகிர்ந்திருக்கிறார். செல்லும் வழியெல்லாம் வீழ்ந்த மரங்கள், கூரைகள் இல்லா குடிசைகள் எனக் காட்சியளிக்கின்றன. எனவே, இதனை எல்-3 பேரிடராக அறிவிக்க வேண்டும் என கார்த்தி கோரியிருக்கிறார்.
எல்-3 அவசர நிலை என்பது மிக மோசமான பேரிடரைக் குறிக்கிறது. அதிகளவில் மனிதர்கள் துன்பத்துக்கு உள்ளாகியிருக்கும் சூழலைக் குறிக்கப் பயன்படுகிறது. இத்தகைய பேரிடர் ஏற்பட்டால் மனிதாபிமான அடிப்படையில் வாழ்வாதாரங்களை இழந்தவர்களுக்கு ஒட்டுமொத்த உதவியையும் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.