விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சர்கார்’ திரைப்படம் உலக அளவில் 2 நாட்களில் 100 கோடி வசூலைக் கடந்து சாதனை புரிந்திருக்கிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘சர்கார்’. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சர்ச்சை, கதை சர்ச்சை ஆகியவற்றை கடந்து ஒருவழியாக தீபாவளியன்று திரைக்கு வந்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால், சன் டிவியில் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தினார்கள்.
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இதனால், முதல் நாள் ‘சர்கார்’ திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலுமே அனைத்து காட்சிகளுக்குமே டிக்கெட் விற்றுத் தீர்ந்தன. தமிழகத்தில் சுமார் 30 கோடியை கடந்து முதல் நாள் வசூலில் பெரும் சாதனையை நிகழ்த்தியது. இதற்கு பல்வேறு தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்கள்.
முதல் நாள் வசூலை விட கொஞ்சமே இரண்டாம் நாள் வசூல் குறைந்திருப்பதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மேலும், உலக அளவில் ‘சர்கார்’ படத்தின் வசூல் சுமார் 100 கோடியைக் கடந்திருக்கிறது என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
பல்வேறு இடங்களில் முதல் நாள் வசூலில் பல தமிழ்ப் படங்களின் முந்தைய சாதனையை முறியடித்தது ‘சர்கார்’. இதனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது.
தற்போது தமிழக அமைச்சர்கள் பலரும் ‘சர்கார்’ படத்தின் காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால், இன்னும் மக்களிடம் ரீச் ஆகும். அதனால் வசூல் குறைய வாய்ப்பில்லை என்றும் விநியோகஸ்தர்கள் தெரிவித்தார்கள். இதனால் ‘சர்கார்’ படத்தின் மொத்த வசூல் கண்டிப்பாக புதிய சாதனையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.